பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38


"என்னைத் தகப்பன் சாமியாகச் சொல்கிறீர்களா?”

"அப்படியென்றால்?"

"தந்தைக்கு உபதேசம் செய்த முருகனைப்போல என்னை உங்களுக்கு சங்கீதச் சிட்சை செய்து வைக்கச் சொல்கிறீர்களா என்று கேட்கிறேன்!"

"ஆரம்பத்திலிருந்து சொல்லி வைக்க விரும்பா விட்டாலும் அந்த நொண்டிச் சிந்து பாடலை மட்டுமாவது சொல்லிவையுங்களேன்?"

"எந்த நொண்டிச் சிந்து பாடலை?"

"அதுதான் காடு நின்று காவல் கொண்டு பாடுகின்ற பாவையே என்று பாடுவீர்களே, அந்தப் பாடலை'

"ஏன், உங்களுக்காக எந்தப் பாவையாவது காடு நின்று காவல் கொண்டு பாடிக் கொண்டிருக்கிறாளா, என்ன? '

"அதெல்லாம் ஒன்றுமில்லை; அந்தப்பாட்டில் எனக்கு ஏதோ ஒரு மயக்கம்...'

"அப்படியா? வாருங்கள், அந்த மயக்கத்தைத் தெளிய வைக்கிறேன்" என்று தியாகராஜன் அவரைத் தன் அறைக்கு அழைத்துக்கொண்டு போய், 'காடு நின்று காவல் கொண்டு பாடுகின்ற பாவையே” என்று நொண்டியடித்துக் கொண்டே பாடினான்.

"ஏன் நொண்டியடித்துக் கொண்டே பாடுகிறீர்கள்?" என்றார் அவர், ஒன்றும்புரியாமல் ,

"நொண்டிச் சிந்து என்றால் சும்மாவா? நொண்டி யடித்துக்கொண்டே பாடித்தான் அதைக் கற்றுக்கொள்ள வேண்டும்' என்றான் தியாகராஜன்.

அவ்வளவுதான்; அட கடவுளே! அதுகூடத் தெரியாமல் போச்சே எனக்கு' என்று அவரும் 'காடு நின்று நொண்டி யடித்துக்கொண்டே பாட ஆரம்பித்து விட்டார்.