45
அதற்காக அதை அவன் அறவே விட்டுவிடுவதும் இல்லை. தக்க இடத்தில் அதற்குத் தரவேண்டிய இடத்தைத் தந்தே வந்தான்.
தன்னையும் தன்னுடைய சங்கீத ஞானத்தையும் தியாகராஜன் இப்படியெல்லாம் அசுர சாதகம் செய்து வளர்த்துக் கொண்டு வந்தபோது ஒரு வேடிக்கையான சம்பவம் நிகழ்ந்தது. அதாவது, ஒரு நாள் வழக்கம்போல் அடுக்களைக்குப் போன அவனுடைய தாயார் மாணிக்கத் தம்மாள் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டே வெளியே வந்தாள்.
காரணம், வேறொன்றுமல்ல; ஒரு பூனைதான்!
குறுகிய வாயுள்ள ஒரு செம்பு; அந்தச் செம்பில் பால்வாங்கி வைத்திருந்தாள் அவள். அதைக் குடிப்பதற் காகச் செம்புக்குள் தலையை விட்டிருக்கிறது பூனை- பலன்? தலையை வெளியே எடுக்க முடியவில்லை!
'மியாவ், மியாவ்'
'பால் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை; தலை வெளியே வந்தால் போதும் என்று ஆகிவிடுகிறது பூனைக்கு:
இந்தக் காட்சியைப் பார்த்த மாணிக்கத்தம்மாளால் எப்படி விழுந்து விழுந்து சிரிக்காமல் இருக்கமுடியும்?
'இதைத் தான் மட்டும் அனுபவித்தால் போதாது; தன் மகனும் அனுபவிக்கவேண்டும்’ என்று நினைத்த அவள், 'தியாகராஜா, தியாகராஜா இந்த வேடிக்கையைப் பார்த்தாயா?" என்று குரல் கொடுத்துக் கொண்டே அவனைத் தேடிவெளியே வந்தாள்.
அவனோ?...
அந்தப் பூனையைப் போலவே குறுகிய வாயுள்ள ஒரு பானைக்குள் தன் தலையை விட்டுவிட்டு, அதை வெளியே எடுக்க முடியாமல் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தான்!