பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

தாச்சாரி செவி சாய்த்தார். 'யார் இந்தக் கோவிந்தாச்சாரி என்கிறீர்களா? சொல்கிறேன். இவர்தான் தியாகராஜனின் சித்தப்பா, கொஞ்சம் வசதியுள்ளவர். 'வசதி என்றால் என்ன வசதி?’ என்று கேட்க மாட்டீர்களென்று நினைக்கிறேன்-பண வசதிதான். அந்த வசதி இருந்தால்தான் மற்ற வசதிகளெல்லாம் தாமாகவே வந்து சேர்ந்துவிடுமே!

ஆனால் ஒன்று - பணம் உள்ள இடத்தில் குணம் இருப்பதில்லை; குணம் உள்ள இடத்தில் பணம் இருப்ப தில்லை. இந்த இரண்டும் சிலரிடம் அபூர்வமாகச் சேர்ந் திருப்பதுண்டு அல்லவா? அந்தச் சிலரில் கோவிந்தாச்சாரி ஒருவர். தியாகராஜனின் கானாமிருதகானத்தைக் கேட்டுப் பரவசமுற்ற அவர், அவனுடைய முதல் கச்சேரியைச் சீரும் சிறப்புமாக அரங்கேற்ற விரும்பினார். அதற்காகப் பக்கவாத்தியக்காரர்கள் சிலரை அவர் அணுகியபோது, 'அந்தப் பையனுக்கா? நாங்கள் வாசிக்க மாட்டோம்!' என்று மறுத்து விட்டனர். காரணம் வேறொன்றும் அல்ல; 'அதனால் தங்கள் அந்தஸ்து குறைந்துவிட்டால் என்ன செய்வது?’ என்ற அச்சந்தான்.

அந்த அச்சத்தில் அர்த்தம் ஒன்றும் இல்லை என்பதை உணர அவர்களுக்கு வெகு நாட்கள் ஆகவில்லை; அரங்கேற்றம் நடந்த அன்றே அதை அவர்கள் உணர்ந்து விட்டார்கள்.

ஆம், கோவிந்தாச்சாரியின் முயற்சியால் தியாக ராஜனின் முதல் குருவான பொன்னுவய்யங்காரே அவனுடைய முதல் கச்சேரிக்குப் பிடில் வாசிக்க ஒப்புக் கொண்டது அவன் தன் வாழ்க்கையில் அடைந்த முதல் வெற்றி. இரண்டாவது வெற்றி, அபிநவ நந்திகேசுவரர்' புதுக்கோட்டை திரு. தட்சணாமூர்த்தி பிள்ளையவர்களின் சீடர்களில் ஒருவரான திரு தட்சணாமூர்த்தி ஆச்சாரி தியாகராஜனின் கச்சேரிக்கு மிருதங்கம் வாசிக்க ஒப்புக் கொள்ளாதது!