பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

எல்லாம் தமிழ்



நடப்பதுபோல நடையிட்டுச் சென்றாள். அவளுடைய நடையில் அன்று ஏதோ ஒன்று இருந்து தடை செய்தது, அவளுக்கே தெரியவில்லை. உலகம் அன்று அவள் கண்முன் களிக்கூத்தாடுவதாகவே தோன்றவில்லை. எங்கும் ஒரே மோன மூட்டம். துயரத்தின் வீக்கம்போல அவளுக்கு ஓர் உணர்ச்சி இருந்தது. 'ஏன் இப்படிக் குழம்புகிறது உள்ளம்? கண்ணில் படும் காட்சியிலே ஜீவனையே காணேமே!' என்று அவளும் சிந்தித்தாள்.

அவள் குழப்பத்துக்குத் துணை செய்வதுபோல அவள் தாய் அழைக்கும் குரல் அவள் காதில் விழுந்தது. "ஏன் அம்மா இன்று இவ்வளவு அவசரம்? ஆற்றுக்கு வழக்கம் போலப் போகாமல் முன்பே எழுந்து புறப்பட்டுவிட்டாயே?" என்று தாய் கேட்டாள். அப்போதுதான் அவளுக்குத் தான் புறப்பட்ட நேரம் வழக்கத்துக்கு முந்தியதென்று தெரியவந்தது. அவள் முந்தி எழுந்ததற்கு என்ன காரணம்? குறிப்பிட்டுச் சொல்லும்படி ஒன்றும் இல்லை. ஆனாலும் அவளுக்கு விரைவிலே விழிப்பு ஏற்பட்டு விட்டது. ஆற்றிலிருந்து யாராவது வா, வா என்று அழைத்தால் போக வேண்டுமென்று ஒரு வேகம் உண்டாகும். அவளுக்கு அப்படித்தான் இருந்தது. ஆனால், ஆற்றிலிருந்து அழைக்க யார் இருக்கிறார்கள்? அவளுக்குத் தெரிந்த ஒருவரும் இல்லை. அவளுக்குப் பழக்கம் இல்லாத ஒன்று அவளைக் கைகாட்டி, வா, வா என்றுதான் அழைத்திருக்கவேண்டும். அது உவகையோடு வந்த அழைப்பு அன்று. ஏனெனில், அவள் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டவளைப்போலத்தான் வேகமாகப் புறப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/10&oldid=1528825" இலிருந்து மீள்விக்கப்பட்டது