பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

எல்லாம் தமிழ்

"அந்தக் கோபமெல்லாம் உன்னிடம் இருக்கட்டும். வா, அம்மா வா. அரசனிடம் வந்து உன் நாடகத்தை நடத்து” என்று சொல்லி அந்த முரடர்கள் அவளை அழைத்துப் போனர்கள்.

2

சேரநாட்டுப் பகுதியை ஆண்ட சிற்றரசன் நன்னன். மற்ற அரசர்களுக்கும் அவனுக்கும் பலவகையில் வேறுபாடு உண்டு. தமிழின்பத்தை நுகர, அவனுக்கு உள்ளம் இல்லை; புலவர் பாடும் புகழைக் கேட்க அவனுக்குக் காதில்லை. பகைவர் மகளிர் அழுகையைக் கேட்டு மகிழும் கல் நெஞ்சுடையவன். அந்த மகளிருடைய கூந்தலை மழித்து அதைக் கயிறாகத் திரிக்கச் செய்து அதை வண்டி மாட்டுக்கு மூக்கணாங் கயிறாகப் பயன்படுத்தும் கொடியவன்." .

பழங்காலத்துத் தமிழ் மன்னர்களுக்குச் சில அடையாளங்கள் உண்டு. அந்த அடையாளங்களில் காவல் மரம் என்பதும் ஒன்று. ஒவ்வொரு குலத்துக்கும் ஒவ்வொரு காவல் மரம் உண்டு. ஆலயங்களில் தல விருட்சத்தைப் பாதுகாத்து வழிபடுவதுபோல அந்த மரத்தைப் போற்றி வளர்த்து வழிபடுவது மன்னர் வழக்கம். பகைவரோடு போர் செய்து வெற்றி கண்டால் பகைவருடைய முரசை எடுத்துக் கொள்வதும் காவல் மரத்தை அழிப்பதும் பழைய காலத்து மரபு.

நன்னனுக்குக் காவல் மரமாக இருந்தது மா. அவனுடைய தோட்டத்தில் அது இருந்தது. யாரும் அதனை அணுக இயலாது. ஆண்டுதோறும் அதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/14&oldid=1528918" இலிருந்து மீள்விக்கப்பட்டது