பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் இட்ட சாபம்

11

காத்து வந்தனர். அவர்களை அடியொற்றி அரசு செலுத்தும் நாம் அந்த மரபைக் காப்பாற்றவேண்டும்.“

அமைச்சர்களிற் பலர் அரசன் போன போக்கே செல்லுகிறவர்கள். "மலையின்மேல் கடல் ஏறுமா?" என்றால், “அரசர் ஆணை இருந்தால் ஏறும்" என்று: சொல்லித் தாளம் போடுபவர்கள். அவர்கள், "மன்னர்பிரான் திருவுள்ளத்தில் நினைப்பது சரிதான்" என்றார்கள்.

ஆனால் முதியவராக இருந்த அவைக்களப் புலவர், "அரசே, நான் சொல்லுவதற்குச் சற்றுச் செவி சாய்க்க வேண்டும்" என்றார்.

"என்ன?" என்று மிடுக்காக அவரைப் பார்த்தான் நன்னன்.

"இந்தப் பெண்ணைப் பார்த்தால் குற்றம் செய்பவளாகத் தோன்றவில்லை. இவள் சொல்வது உண்மையாகத்தான் இருக்க வேண்டும். கட்டுக் காவலுக்குள் இருக்கும் மரத்தை அணுகிக் காயைப் பறிப்பதற்கு, மிகுதியான சாமர்த்தியம் வேண்டும். பகைவரே அணுகுவது அரிது என்று அரசர்பிரான் சொல்லும் போது, இந்த மெல்லியல் எப்படி அணுக முடியும்? ஒரு சிறு மாங்காய்க்காக அரச தண்டனையை ஏற்றுக் கொள்ள யாரேனும் முன் வருவார்களா? இவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்."

புலவர் கூறியதை நன்னன் அலட்சியமாகவே கேட்டான். "அப்படியானல் இவள் பறிக்கவில்லை; இவளோடு சேர்ந்த கள்வன் ஒருவனும் உண்டு என்று சொல்லுகிறீர்களா?" என்று வினாவினான்.

"இல்லை, இல்லை; இவள் குற்றம் செய்தவள் அல்லள் என்று சொல்லுகிறேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/19&oldid=1528937" இலிருந்து மீள்விக்கப்பட்டது