பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலக்கமும் தெளிவும்

 பாண்டிய மன்னர் பலரும் தங்கள் தங்கள் ஆற்ற லாலும் அருங்கொடையாலும் அறிவுச் சிறப்பாலும் பெரும் புகழை அடைந்து விளங்கினவர்களே. ஆனுலும், முதுகுடுமிப் பாண்டியன் தனக்கெனச் சிறப்பான கீர்த்தியைத் தேடிக்கொண்டவன். வழுதியர் வம்சத்தில் அவன் சிறந்தோர் வரிசையிலே எண்ணுவதற்கு உரியவன். ஆகவே, அவனைப் பாண்டியன் என்றோ வழுதி யென்றோ சொல்லாமல் பெருவழுதி என்று மக்கள் அனைவரும் வழங்கினர். முதுகுடுமிப் பெருவழுதியின் புகழ் இந்த அளவோடு நிற்கவில்லை. அவனுடைய வீரச் செயல் இமயம் முதல் குமரி வரையில் அவனுக்குப் புகழை உண்டாக்கியது. அவன் செய்த புண்ணியச் செயல்களோ பூவுலகத்துக்கு மேலும் கீழும் பரந்து புகழை உண்டாக்கின. தேவர்களுடைய உள்ளம் உவக்கும் செயல்களைத் தக்காரைக் கொண்டு செய்வதில் அவன் ஈடுபட்டான். மக்கள் இனிது வாழ்வதற்கேற்ற யாகங்களைச் செய்வித்தான். அங்கங்கே வேள்விகள் நிகழும் யாகசாலைகளைப் புரக்கும் பெரு வண்மையை உடைய அவனை, பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்று யாவரும் சொல்லிப் பாராட்டினார்கள்.

நல்லவர்களையும் வீரர்களையும் பாடுவதற்கு வாயூறிக் கிடக்கும் புலவர்கள் பலர் முதுகுடுமியின் புகழைப் பாடினர். அப்படிப் பாடும்பொழுது ஒருவர் சொன்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/42&oldid=1529179" இலிருந்து மீள்விக்கப்பட்டது