பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேதுபதியின் மோதிரம்

81

 என்பதையும், இந்தப் பாட்டை உடைத்துப் பார்த்து இது மாணிக்கம் போன்ற பொருளை உடையதென்று உணர்ந்ததையும் இப்போது உருட்டிய தேங்காய் சொல்லும் ; அதை உடைத்துப் பார்த்தால் தெரியும்" என்று மன்னர் சொன்னார். தேங்காயை உடனே உடைத்துப் பார்த்தால், உள்ளெல்லாம் மாணிக்கக் கற்கள் ! அந்த மாதிரி நிகழ்ச்சி உலகத்திலே சில காலங்களில்தான் நிகழக்கூடும்.

அந்தக் கவிராயரைப் பிரிந்து அவள் வாழ்வது கிடக்கட்டும்; " பாட்டுக் கிசைந்த ரகுநாத சேதுபதி" எப்படி வாழ்கிறார் ? சேது சம்ஸ்தானத்தில் கவிராயர் பலர் உண்டு; வெளியூரிலிருந்தும் வருவார்கள். ஆனால் அமிர்த கவியின் அமுத கவி இருந்தால்தான் அரசருக்கு இன்பம் நிறைவடையும்.

இந்தப் பழங்கதையையெல்லாம் அவள் நினைத்துப் பார்த்தாள். அந்த நினைவுலகத்திலிருந்து உண்மை உலகத்துக்கு இறங்கி வருகையில் நிலை குலைந்து பெருமூச்சு விடுகிறாள். வேறு என்ன செய்வாள், பாவம் !

கவிராயர் மனைவியை ரகுநாத சேதுபதி அருமையாகப் பாதுகாத்து வந்தார். கவிராயர் இல்லாத குறையைத் தவிர அந்தப் பெண்மணிக்கு வேறு ஒன்றாலும் குறை வைக்கவில்லை. அந்த அம்மைக்குத் தன் குழந்தையிடம் இருந்த அன்பு பெரிதுதான் ; ஆனலும் அமிர்த கவிராயர் கான்முளை வருங்காலத்தில் அவர் பெயரைக் காப்பாற்றுவான், சம்ஸ்தானத்துக்குப் புகழ் உண்டாக்குவான் என்ற ஆர்வத்தோடு சேதுபதி அந்தக் குழந்தையைப் பாதுகாக்கவேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தாரே ; அது மாத்திரம் சாமானியமான அன்பா?

6
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/89&oldid=1529807" இலிருந்து மீள்விக்கப்பட்டது