பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

எல்லாம் தமிழ்


அரண்மனைக்கு அருகில் அந்த வீடு இருந்தது. கவிராயருடைய மனைவி ஒரு கிழவியோடு வாழ்ந்து வந்தாள். கூடத்திலே தொட்டிலைக் கட்டி அதிலே குழந்தையை விட்டுத் தாலாட்டிக் கொண்டிருந்தாள். கூடத்துச் சுவரின் சாளரத்து வழியே பார்த்தால் அரண்மனையின் மேற்பகுதி தெரியும்.

பழைய ஞாபகத்திலே தோய்ந்தெழுந்த உள்ளத்தில் உற்சாகம் பிறக்கும்; உடனே தன்னையும் அறியாமல் உச்ச ஸ்தாயியிலே அவள் தாலாட்டைப் பாடுவாள்.

அப்போது அவள் கண்ணில் திடீரென்று ஒரு மருட்சி தோன்றியது. தொட்டிலின்மேல் அவள் கண் ஒடியது; அப்பால் சுவரிலே பாய்ந்தது ; சாளரத்திலே சென்றது ; அதனூடே கூர்ந்து கவனித்தது. சாளரத்தின் வழியே வந்த ஒரு பிரகாசந்தான் அவளை அப்படிப் பார்க்கச் செய்தது. ஒளிக்கதிர் தொட்டிலின் மேலே விழுந்ததை அவள் கண்டாள். சாளரத்தின் வழியே அந்தக் கதிர் வந்தது. எங்கிருந்து வந்ததென்று ஆராய்ந்தாள்.

அரண்மனையின் மேல் மாடியிலே ரகுநாத சேதுபதி கைபிடிச் சுவரின் மேலே சாய்ந்துகொண்டு தாலாட்டுப் பாட்டைக் கேட்டு ரசித்துக்கொண்டிருந்தார். கைபிடியின்மேல் வைத்த கையில் மிக உயர்ந்த கற்கட்டு மோதிரம் அணிந்திருந்தார். எதிரே வீசிய சூரியனது கதிர் அதிலே பட்டுப் பளபளத்தது. அதிலிருந்து கிளம்பிய கதிர் அவர் உள்ளத்தைப் போலச் சாளரத்தின் வழியே புகுந்து தொட்டிலிலே, படர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/90&oldid=1529808" இலிருந்து மீள்விக்கப்பட்டது