12
எல்லோரும் இந்நாட்டு மன்னர்
சட்டமன்றங்களில் அமர்ந்து, சட்டமியற்றுவோருக்கு, அதற்குத் தேவையான, அறிவாற்றல் இல்லை; அவர்களுக்கு, உள்ள ஒரே தகுதி, அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதுதான். அப்படித் தேர்ந்தெடுத்த மக்கள் யார் எனில் இவர்களைப்போவே அறிவாற்றலற்றவர்கள் — என்ற கருத்துப்படப் பேசிவிட்டார்.
குருடும் குருடும் குருடாட்டம் ஆடுவது போல என்பார்களே, அதுபோல, இன்று ஆட்சி முறை இருப்பதாக, அவர் கருதுகிறார்.
இவ்விதமான கருத்துக்கொண்டுள்ள, இவரே, குடிஅரசுத் தலைவராக, இன்று அமர்ந்திருப்பது, கேலிக்குரிய, கண்டிக்கத்தக்க, தரம்கெட்ட ஒரு அரசியல் முறையின் மூலமாகத்தான் என்பதை அவர் மறந்துவிட்டிருக்க முடியாது. சிலராகிலும் இதைச் சுட்டிக்காட்டுவார்களே என்பதைத் தெரிந்தும்தான், குடிஅரசுத் தலைவர் அவ்விதம் பேசியிருக்கிறார். பேசியதோடு நிற்கவில்லை, சட்டமன்றங்கள் செல்வதற்குச் சில தகுதிகள் இருத்தல் வேண்டும்; சில தகுதிகளைக் குறிப்பிட்டு, அத்தகுதிகள் உள்ளவர்கள் மட்டுமே, சட்டமன்றங்கள் செல்லலாம் என்று முறை ஏற்படுத்துவது மிக நல்லது என்றும் எடுத்துக்காட்டி இருக்கிறார்.
மிக உச்சிக்குச் சென்று அமர்ந்து கொண்டவர்களும், சட்டமன்றம் போன்ற இடங்கள் செல்வது தமது தகுதிக்குக் குறைவு என்று கருதுவோரும், சட்டமன்றம்போன்ற இடங்களுக்குச் செல்லமுடியாது கிடப்போரும், செய்திடும், ‘உபதேசம்’ இது என்று மட்டும், பாபுவின் பேச்சைக்கொள்வதற்கு இல்லை.