எல்லோரும் இந்நாட்டு மன்னர்
17
மற்றவை ஒழியவேண்டும், என்று பேசிற்று என்பதாகக் கூறினார் ஸ்பெயின் நாட்டுக்காரர்.
அது, சோவியத்தைக் கிண்டல் செய்யப் பேசப்பட்டது.
ஆனால், இதிலே தொக்கி நிற்கும் உண்மை, ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டுக்கு வலிவு எதுவோ, அதை ஒழிக்கவே, போர்க்கருவி ஒழிப்பு மாநாடு நடத்துகிறது, என்பதுதான்.
போர்க்கருவிபற்றி மட்டுமல்ல, ஆட்சிமுறை பற்றியும். பெரும் தலைவர்கள் பேசுவது, இஃதே போன்ற நோக்குடையதாகவே இருந்துவரக் காண்கிறோம்.
நோக்கம் இருக்கட்டும், இந்தப் பேச்சுப்பேச ஏன் முன்வந்தனர், பாபு போன்றார்! மக்கள், குடி அரசு முறையிலே அடியோடு நம்பிக்கை இழந்துவிடவில்லையே தவிர, எதிர்பார்த்த பலன், நலன், குடி அரசு முறைமூலம் கிடைக்கக் காணோமே என்ற ஏக்கமும் திகைப்பும், மக்கள் மனதிலே, வேகமாக வளர்த்த வண்ணம் இருக்கிறது.
அதனைத் தெரிந்துகொண்டே பெருந்தலைவர்கள் இதுபோலப் பேசத் தலைப்பட்டுள்ளனர்.
மக்களுக்குத், திகைப்பு ஏற்பட்டிருப்பதற்கும் காரணம் நிரம்ப இருக்கிறது.
எந்தக் குடி அரசு முறைபற்றி விழாக் கொண்டாடி, மக்களை, ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே! என்று பாடி, ஓட்டு வாங்கி, ஆட்சி நடத்தத் தொடங்கினார்களோ, அந்தக் காங்கிரசார் ஆட்சியிலே, வெள்ளைக்கார ஆட்சியிலே நடைபெற்றதைவிட, அளவிலும் வகையிலும் அதிகமான அடக்குமுறை அவிழ்த்துவிடப்படுகிறது.
உலகுக்கே, காந்திபோதனை பேசிவிட்டு, ஊர் திரும்புகிறார், நேரு பண்டிதர்; அவர் ஆட்சியிலே என்ன நடக்கிறது; எதைக் கண்டார்?
சிறையில் அடைக்கப்பட்ட அகாலியர், கலகம் செய்தனர். என்பதற்காகச், சிறையிலே சுட்டுத்தள்ளப்பட்டனர்.