குழல்மொழி, கயல்விழி, துடியிடை, புன்னகை பூத்திடும் பொன்னவிர் மேனியாள், ஏழிசைவல்லி, ஆடலழகி, எனும் அணங்குகள், தத்தமது திறனத்தனையையும் தங்குத் தடையின்றித், தரக்குறைவின்றிக், காட்டிப் பார்த்தனர் – காவலன், கடுகடுத்த முகத்தோனேயன்றிக் கலகலப்புப் பெற்றானில்லை.
மாற்றார்கள் களத்தில் போட்டோடிச் சென்று, மாமல்லர்களால் எடுத்துவரப்பட்ட, குருதிதோய்ந்த கொடிகள், உடைந்துகிடந்த யானைத் தந்தங்கள், வாட்பிடிகள், வேற்கம்புகள் இவையெலாம் கொண்டுவந்து எதிரே குவித்துக் காட்டினர், கோமான், வீர்ச்செயல் பற்றிய நினைவுபெற்று, மகிழ்ச்சிபெறுவான் என்று எண்ணி; மாமன்னனோ, அப்பொருட் குவியலைக் கண்டு புன்னகையும் செய்தானில்லை.
கன்னியரின் கடைக்கண் ஊட்டிடாத சுவையைக் கனிவகையா தந்திடும்! எனவே, பழவகைகளைக் கொணர்ந்ததும், பட்டத்தரசன், எட்டிப் போ! என்று கட்டளையிட்டான் பணியாட்களை நோக்கி,
மன்னன் மனமகிழவேண்டும்—அவையினர் ஏதேதோ எண்ணினர்; தெளிவு பிறந்திடவில்லை.
“யானறிவேன், அவருக்குக் களிப்பூட்டும் வகை” என்றான் கவிதை வல்லானொருவன்.