பக்கம்:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

எல்லோரும்‌ இந்நாட்டு மன்னர்‌


“ஐயா புலவரே! எதுகை மோனையைக்‌ காட்டியா, மன்னனை மகிழ்விக்க முயல்கிறீர்‌, வானவில்லென வளைந்து நின்றாள்‌, வடிவழகி; மன்னன்‌ ஏறெடுத்தும்‌ பார்த்திட மறுத்தான்‌. கரம்‌ இரண்டன்றி வேறோர்‌ துணை தேடிடாது, வேங்கையுடன்‌ போரிட்டுக்‌, கழுத்தை நெறித்தானே, வேங்கையை—வெற்றிவேலன்‌ பெற்றெடுத்த வீரமைந்தன்‌—அதன்‌ பற்களைக்‌ கொட்டிக்‌ காட்டினோம்‌—சுற்றுமுற்றும்‌ பார்த்தனனேயன்றி, மன்னன்‌, அதனை உற்றும்‌ பார்த்ததுண்டா? இந்நிலையில்‌ உள்ளான்‌ ஊராள்வோன்‌; நீவிர்‌ ஏடு தூக்கிக்‌ காட்டிடின்‌ வேந்தன்‌ கொண்டுள்ள கசப்‌பெலாம்‌ கரைந்தோடிப்போகும்‌, களிப்பு மலரும்‌ என்று கருதுவது, எத்துணை பேதைமை!” என்று எடுத்துரைத்‌தனர்‌, அவை அமர்ந்த முதியோர்‌.

“ஐயன்மீர்‌! அருங்கவிதைத்‌ திறன்காட்டி அல்ல, மகிழ்ச்சியூட்ட விரும்புவது. என்‌ கவிதையும்‌, அரசர்க்குச்‌ சிரிப்பூட்ட அல்ல; அவனிக்கு அறிவூட்ட! அதனையும்‌ அறிமின்‌! யான்‌ நினைப்பது முற்றிலும்வேறு!” என்றான்‌ புலவன்‌.

“வாதிட்டுப்‌ பொழுதினை ஓட்டிடுவதைக்‌ காட்டிலும்‌, அவர்‌ வகுத்திடும்‌ முறையேனும்‌, மன்னனின்‌ சோகத்தை நீக்கிடுகிறதா என்பதைக்‌ கண்டிடுவதே சாலச்‌ சிறந்தது” என்றனர்‌ ஆன்றோர்‌.

புலவர்‌, எழுந்தார்‌; பணியாளரிடம்‌, ஏதோ, மெல்லிய குரலிற் கூறினார்‌; அமர்ந்தார்‌! அரசனை விளித்தார்‌.

“கோமானே! எட்டுத்‌ தளபதிகளைக்‌ கீழே வீழ்த்தி, பதினாறு வேற்படை வீரரின்‌ பற்களைத்‌ தட்டிப்பறித்து, பழம்பெரும்‌ போர்க்கலை ஆசானின்‌ இடுப்பிலே, ஈராண்டும்‌ தீராத, வலி ஏற்படத்தக்கதான உதை கொடுத்து, கரிப்‌படைத்‌ தலைவனின்‌ கண்ணைக்‌ கலங்கிடச்‌ செய்த, வீராதி வீரன்‌, குரலெடுத்துப்‌ படை நடுங்கிட வைத்திட வல்லோ-