8
எல்லோரும் இந்நாட்டு மன்னர்
தம்பி! குடிஅரசு கண்டனர், என்று மிகச் சுருக்கமாகக் கூறி விட்டேன்—ஆனால் மிக நீண்ட, பயங்கரப் பயணம் நடாத்தியே மக்கள் குடிஅரசு கண்டனர்.
முடிஅரசு, கேடு பயப்பினும், மக்கள் தாங்கிக்கொள்ள வேண்டுமேயன்றி, மாற்றிவிட இயலாது.
குடிஅரசு, கேடு தந்திடின், மாற்றி அமைத்திடும் உரிமை மக்களுக்குக் கிடைக்கிறது.
முடிஅரசு, கோணல் வழி சென்றிடினும், கண்டித்துப் பேச, மக்களுக்கு உரிமை கிடையாது—உயிரைப்பற்றிய கவலை இருக்கும்வரை!!
குடிஅரசு, தவறுசெய்வதாகத் தோன்றும் போதே மக்கள் எடுத்துரைக்கலாம், கண்டிக்கலாம், எதிர்க்கக்கூடச் செய்யலாம்
முடி அரசுக்கும், குடி அரசுக்கும் இடையே உள்ளது இந்த வித்தியாசம். பல நூற்றாண்டுகள் சிந்தனையாளர்களும் வீரத்தியாகிகளும், அரும்பாடுபட்டு ஈட்டிய முறை, குடிஅரசு.
முடி அரசுக் காலத்தில், மன்னனை மகிழ்விக்க வேண்டியது, தமது கடமை என்று கிடந்தனர் மக்கள்.
அந்த மகிழ்ச்சி, கதை காட்டினேனே, அது போல் கோவேறு கழுதையின். வீரம்பற்றி, நகைச்சுவையுடன் எடுத்துக் கூறிக் களிப்பூட்டும் வகையினதாகத்தான் இருக்கும் என்பதல்ல பொருள் —மதியிலி மன்னனாக இருக்கும்போது இதுபோதும்! மமதையாளன் மன்னனானாலோ, அவன் மனம், குடிமகனொருவன் பெற்றெடுத்த செல்வத்தின் கற்பைச் சூறையாடுவதிலே தான் மகிழ்ச்சிபெறும் என்றால், அதுதான் நடக்கும்; மானமுள்ளோருக்குப் புகலிடம், சிறைக்கோட்டம், வெட்டுப்பாறை, அல்லது மரக்கிளை!