பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/8

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மானிடப் பிறவி

என்னருமைத் தம்பிகளே, தங்கைகளே!

நீங்களும் நானும் பெறற்கரியது பெற்றவர்கள். எது பெறற்கரியது? மானிடப் பிறவி பெறற்கரியது. உயிர்வகைகள் எத்தனை எத்தனையோ! நாம் புல்லாய் முளைத்தோமா? பூண்டாய்க் கிளைத்தோமா? புழுவாய் வந்தோமா? ஊர்வனவாய் உருவானோமா? பறவைகளாய் வெளியானோமா? விலங்குகளாய் வந்தோமா? இத்தனையும் விட்டு வந்தோம். மானிடப் பிறவி பெற்றோம். மக்கள் இனத்திலே தோன்றினோம்.

நீ பிறந்ததும் மக்கள் இனத்தில். யான் பிறந்ததும் மக்கள் இனத்தில். பாரதி பிறந்ததும் மக்கள் இனத்தில். இளங்கோ பிறந்ததும் மக்கள் இனத்தில். வள்ளுவர் பிறந்தது மாக்கள் இனத்திலா? இதற்கு ஏன் உங்கள் கண்கள் சிவக்கின்றன? யானோ வள்ளுவரை இழிவுபடுத்துவேன்? வள்ளுவர் தோன்றியதும் மக்கள் இனத்திலேதான். அதனாலன்றோ மக்கள் இனம் முழுமைக்கும் பொதுமறை வழங்க முடிந்தது!

தமிழ்ப் பெரியோர் இருக்கட்டும். பிற பெரி யோர்களையும் கவனிப்போம். இரவீந்திரநாத் தாகூர் பிறந்தது எந்த இனம்? மக்கள் இனம். விவேகானந்தர் பிறந்தது? மக்கள் இனமே. ஷேக்ஸ்பியர் என்ன இனம்? மக்கள் இனம். ஷெல்லி? அவரும் மக்கள் இனத்தவரே! டால்ஸ்டாய் வேறு இனமோ? இல்லை, இல்லை. மக்கள் இனமே.

அண்ணல் காந்தியடிகளும் மக்கள் இனம். அவர்வழி நின்று, உரிமைக்குப் போராடிய டாக்டர் மார்டின் லூதர்கிங்கும் மக்கள் இனமே.