பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

எதிர்பார்க்கிறார். இவரை மாதிரி அநேகர் இப்படி நடந்து கொள்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் நாமும் மற்ற பிரபல எழுத்தாளர்களும் பெறுகிற மாலை மரியாதைகள், உபசாரங்கள், பாராட்டுக்கள், கவனிப்புகள் தான் தெரிகின்றன. நாம் பட்டிருக்கிற சிரமங்கள், இந்த நிலைக்கு நாம் வளர்வதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிகள், செய்த உழைப்புகள் எல்லாம் தெரிவதில்லை. நாமும் எழுத்தாளனாகி ஒரு பத்திரிகையில் சேர்ந்து விட்டால் நம்ம நிலையும் உயர்ந்து விடும் என்று தப்புக் கணக்கு போடுகிறார்கள். இருக்கிற வேலையை விட்டு விட்டு, சென்னைக்கு வந்து கஷ்டப்படுகிறார்கள். இவர்கள் அறியாமையைப் பற்றி என்ன சொல்ல!’

பத்திரிகை உலக யதார்த்த நிலையையும் எழுத்தாளர்களது மன நிலையையும் அவள் உள்ளது உள்ளபடி சொன்னார் என்றே கொள்ள வேண்டும்.

2


பத்திரிகைகள், புத்தகங்களைப் படிக்கிற வாசகர்களில் பலருக்கு, நாமும் இதுமாதிரி எல்லாம் எழுதலாமே என்ற எண்ணம் ஏற்படுகிறது; கதைகள் கவிதைகள் எழுத வேண்டும் என்ற ஆசை உண்டாகிறது. அவர்களில் அநேகர் எழுத்து முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.

எழுத வேண்டும் என்ற எண்ணம் பெரும் பலருக்கு ஏற்பட்டாலும் கூட, எதை எழுதுவது, எப்படி எழுத