பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்



1950க்குப் பின் வந்த ஆண்டுகளில் முதலில் வெளிவந்த குறிப்பிடத்தக்க புஸ்தகம், ஒரு திட்டமிட்ட பாட முறையின் அடிப்படையில் பல மேல்நாட்டு விமர்சன அபிப்ராய மேற்கோள்களுடனும் ஒரு பாட புஸ்தகமாக எழுதப்பட்ட அ.க. ஞானசம்பந்தம் எழுதிய 'இலக்கிய விமர்சனம்’ என்ற நூல். அது, ஒரளவுக்கு, இலக்கியம் பற்றி தெரிந்துகொள்ள ஆரம்பிப்பவர்களுக்கு உபயோகமாகிற புஸ்தகம். இந்த விஷயங்களைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிவிக்கக்கூடிய இரண்டாவது புஸ்தகம் இனிமேல்தான் வரவேண்டும். குறிப்பிடத்தக்க மற்றொரு புஸ்தகம் புதுமைப்பித்தன் எழுதியுள்ள புதுமைப்பித்தன் கட்டுரைகள் என்பது. அதற்கு முந்தின இருபது வருஷகாலத்தில் எழுதப்பட்ட கட்டுரைத் தொகுதி அது. இலக்கியத்தின் பொதுவான லக்ஷணங்களை ஆராயும் நோக்கத்துடன் எழுதப்பட்டவைகள் என்று அவரே குறிப்பிட்டவாறு, அந்த கட்டுரைகள், அக்காலத்து இலக்கியப் போலிப் படைப்புகளை கடுமையாகத் தாக்கி, புதிய சோதனைகளையும நோக்குகளையும் கொள்ளும்படியாக கேட்ட ஒரு உறுதிபடைத்த படைப்புக் குரலின் முத்திரையைக் கொண்டனவாக இருப்பவை. இவை தவிர, கு.ப.ராஜகோபாலன் பத்திரிகைகளில் எழுதியுள்ள, புஸ்தகமாக இதுவரை வெளிவராத பல கட்டுரைகளும் மற்றும் பலரது தனிக் கட்டுரைகளும் பல உள்ளன. .

மொத்தத்தில், ஒருவிதமாக தற்கால தமிழ் இலக்கிய விமர்சன தோரனை அதன் இலக்கிய செழுமைக்குத்தக்கபடி இருக்க வேண்டிய அளவுக்கு வெளிப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பல முன்வரிசை சிறுகதை ஆசிரியர்கள், நாவலாசிரியர்கள், கவிகளது படைப்புக்கள். இனித்தான் மதிப்பிடப்பட்டு, பகுத்துப் பார்க்கப்பட இருக்கின்றன. அவர்களது வியக்தி ஆராயப்பட்டு, அவர்களது வாழ்க்கை நோக்கு, சித்தாந்தம் நிரூபிக்கப்பட இருக்கிறது. இலக்கியத்தில் அவர்கள் கொண்ட பங்கை அளவிட வேண்டி இருக்கிறது. இவை சம்பந்தமாக ஒரு பரபரப்பை இப்போது ஒருவர் பார்க்கமுடிகிறது.தமிழ் இலக்கிய விமர்சனத்துக்கு இது ஒரு எதிர்கால ஒளிகாட்டுவதாக இருக்கிறது. இதுபற்றி இரண்டு அபிப்ராயங்கள் இருப்பதற்கில்லை.

101