பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

வெங்கடராமனின் எல்லாக் கதைகளும் புத்தக வடிவில் இன்னும் வெளிவராவிடினும், அவருடைய இலக்கிய வளர்ச்சியைப் பற்றி (பத்திரிகைகளில் வெளிவந்தவற்றைத் தொடர்ந்து வாசித்த வரையில்) ஒரு அளவுக்குத் தெளிவாகச் சொல்ல முடியம். ஆதியில் வந்த கதைகள் உலகைக்கண்டு கோபமும் துக்கமும் பொங்கிய உணர்ச்சிக் கற்பனைகள். அடுத்தபடியாக வந்தவை உலகத்தைக் கண்டு குரூரமாகவும் கபடமாகவும் சிரித்துக் கிண்டல் செய்தவைகள். மூன்றாவதாக கண்ணை உள்நோக்கித் திருப்பிய உண்மை தேடியின் அனுபவங்களின் இலக்கிய வடிவங்கள். ஆனால் இந்த மூன்று கட்டங்களிலும் மனமுதிர்ச்சி நிறைந்தே காணப்பட்டு வந்திருக்கிறது. இந்த 'இருட்டும்' 'உயிரின் யாத்திரையும்' மூன்றாவது நிலையச் சேர்ந்தவை.

தினம் காண்கிற கதைகளிலும் வேறுபட்டவை இந்தக்கதைகள். அதாவது மனிதன் சமூகப் பிராணி அல்லது குடும்பப் பிராணி என்ற அன்றாட நிலையை கடந்து, தனியாக நின்று உள்நோக்க முயற்சி செய்யக்கூடியவன்(வேண்டியவன் என்றும் சொல்லலாம்) என்ற நிலையில் நின்று எழுதப் பட்டவைகள்.

“நடராஸா" என்ற கூத்தரசு என்று ஒரு வாலிபன். முரட்டுப் பகுத்தறிவுவாதி- அதாவது பகுத்தறிவுக்கு இன்று உள்ள பொருளில் கடவுள், கோயில் எல்லாவற்றையும் ஒழித்துக்கட்டி மக்களை அறிவு சொர்க்கத்திற்கு ஏற்றி வாழவைக்க ஏங்குகிற இளைஞன். இந்தப் பகுத்தறிவு வாதத்தில் இவனையே ஏப்பம் விட்டுவிடுகிற வெண்ணிலா என்கிற பெண்ணை ஒரே பேச்சு மேடையில் சந்தித்து, காதலிக்கிறான். அன்றிரவு கும்பகோணம் கோவில்களைச் சபித்துக் கொண்டே மயான பூமிக்குப் போய்க்காதலை பரஸ்பரம் தெரிவித்துக் கொள்கிறார்கள். ஆறு மாதம் போக அமளியில் திளைக்கிறார்கள். அதிபோகத்தினால் கூத்தரசு வலுவிழந்து டாக்டரிடம் போகிறான். ஒரு நாள் இரவு இருட்டில் இருவரும் படுத்திருக்கும் போது பக்கத்தில் படுத்திருந்த வெண்ணிலாவின் கைவேறு, கால் வேறு, தலை வேறாகக் கிடப்பது தெரிகிறது. விளக்கைப் போட்டவுடன் அவள் முழு உடம் புடன் அழகாகத் தூங்குவதும் தெரிகிறது. விளக்கையணைத்ததும் மீண்டும் அந்த பயங்கர முண்டக் காட்சி.

103