பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/115

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
"சி.சு. செல்லப்பா - க.நா.சு"
சில குறிப்புகள்
தி.க. சிவசங்கரன் (தி.க.சி)

மணிக் கொடி எழுத்தாளர்களான க.நா. சுப்பிரமணியம் (தோற்றம் : 31-01-1912); (மறைவு 16-12-1988) சி.சு. செல்லப்பா (தோற்றம் 29-09-1912 மறைவு 18-12-1998) ஆகிய இருவரும் தற்கால தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பல்வேறு துறைகளில் பல்வேறு விதங்களில் பெரும்பங்காற்றியவர்கள் என்பது நாடறிந்த உண்மை.

மணிக் கொடி காலகட்டம் என்பது 1934-1940 ஆகும். மணிக்கொடியின் மூலவர் 'வ.ரா' எனப்படும் வ. ராமசாமி. அதன் தொடர்ச்சியாக வந்த சிறுகதை மணிக்கொடியின் ஆசிரியர் பி.எஸ். ராமையா.

சிறுகதை மணிக்கொடியில் புதுமைப்பித்தன், மெளனி, கு.ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, ந. சிதம்பர சுப்ரமணியன், சி.சு. செல்லப்பா, பெ.கொ. சுந்தரராஜன், (சிட்டி) பி.எஸ். ராமையா, எம்.வி. வெங்கட்ராமன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

மகாகவி பாரதியின் லட்சியங்களான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை கலை இலக்கியத்துறையில் பரப்புவதற்காக, வ.ரா, கு. சீனிவாசன் , டி.எஸ். சொக்கலிங்கம் ஆகியோர் மணிக்கொடி வார இதழை ஆரம்பித்தனர்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு அது சிறுகதைக்கான மாதம் இரு முறை இலக்கிய இதழாக மாற்றப்பட்டது.

இந்த மணிக்கொடி எழுத்தாளர்களில் படைப்புத்துறையில் மட்டுமின்றி, திறனாய்வுத் துறையிலும் புகழ் பெற்றவர்கள் க.நா.சு வும், சி.சு. செல்லப்பாவும் ஆவர்.

திறனாய்வுத்துறையில் இவர்களது இலக்கியக் கொள்கைகளையும் போக்குகளைவும் விளைவுகளையும் மிகச்சுருக்கமாக ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

108