பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வல்லிக்கண்ணன்

இலக்கிய உணர்வு என்பதில் அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டிருந்தார்கள். அவர்கள் தங்கள் வாழ்வையே இலக்கியத்துக்காக அர்ப்பணித்துக் கொண்டிருந்தார்கள். அதனால் பலவிதமான சிரமங்களுக்கும் சோதனைகளுக்கும் அவர்கள் உள்ளானார்கள். எனினும், சாதனைகள் படைப்பதில் அவர்கள் ஊக்கமும், உற்சாகமும் காட்டினார்கள்.

அவர்களில் சி.சு. செல்லப்பா விசேஷமாகக் குறிப்பிடத் தகுந்தவர். தனித்தன்மை உடைய சிறுகதைகள் படைத்துக் கவனிப்புப் பெற்ற செல்லப்பா நாவல், கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, பத்திரிகைத்துறை, பதிப்புத்துறை என்று பலவகைகளில் தனது ஆற்றலையும் ஈடுபாட்டையும் வெளிப்படுத்தி பாராட்டுதற்குரிய சாதனைகள் புரிந்திருக்கிறார். சதாகாலமும் அவருடைய சிந்தனையும் பேச்சும் தமிழ் இலக்கியம் குறித்ததாகவே இருந்தன. தீவிர வேகத்துடன் முனைந்து செயலாற்றி இலட்சியவாதியாகவும் அவர் விளங்கினார்.

இப்படிப் பலதுறைகளில் அவரது பங்களிப்பும் சாதனைகளும் பெரும் அளவில் இருப்பினும், சி.சு. செல்லப்பா என்றதும் ஒரு இலக்கிய வாசகனுக்கு நினைவுக்கு வருவது 'எழுத்து' பத்திரிகை தான். அவ்வளவுக்கு அவருடைய 'எழுத்து' இதழ் தனிச் சிறப்பும் வரலாற்றுப் பெருமையும் கொண்டது ஆகும்.

5