பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/133

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
“எழுத்து” மதிப்பீடு

- சின்னக்குத்தூசி

1

எழுத்தாளர்கள் எல்லோருக்குமே - அவர்களது எழுத்துலக வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் சொந்தத்தில் ஒரு பத்திரிகை நடத்திப் பார்ப்போம் என்கிற ஆசை வராமல் இருக்காது. சொந்தமாக ஒரு பத்திரிகை நடத்தி பத்திரிகை உலகில் பல புதுமைகளைச் செய்து காட்ட வேண்டும் என்ற இலட்சியப்பார்வையோடுதான் பத்திரிகைகளை ஆரம்பிப்பார்கள். முதல் இதழே முப்பதாயிரம் போகும். ஒருவருடத்திற்குள் ஒரு இலட்சத்தை எட்டிவிடலாம் என்கிற கனவுகளோடுதான் பத்திரிகையை ஆரம்பிப்பார்கள்.

அதன் பின்னர், அவர்கள் ஆரம்பித்த பத்திரிகைகள் எதிர்பார்த்தபடி விற்பனை ஆகாது. விளம்பரம் இல்லாததால்தான் விற்பனை எதிர்பார்த்தபடி இல்லை என்று அவர்களாகவே கணித்துக் கொண்டு கையிலுள்ள சிறுமுதலை விளம்பரம் செய்வதிலும் செலவழிப்பார்கள். அப்புறம் தமிழகம் முழுவதிலும் விற்பனையாளர்கள் பரவலாக இல்லாததால்தான் விற்பனை நாம் நினைத்தபடி இல்லாமல் போய் விட்டது என்று தங்களுக்குத் தாங்களே ஒரு சமாதானம் சொல்லிக்கொள்வார்கள். நண்பர்கள் வருவார்கள் 'நீங்கள் சொல்கிற எல்லாக் காரணங்களும் சரிதான்; அது தவிர இன்னொரு பெரிய காரணமும் இருக்கிறது. பத்திரிகை அட்டையிலிருந்து கடைசிப்பக்கம் வரையில் விஷயம் தெரிந்த - அறிவாளிகள் படித்துப் பாராட்டும் விதத்தில்தான் இருக்கிறது. எல்லாமே கனமான விஷயங்களாக இருக்கின்றன. பத்திரிகை விற்பனை கூடவேண்டுமானால் அது சகல ஜனங்களையும் சென்றடைவதாக இருக்கவேண்டும். எல்லாத்தரப்பு மக்களையும் கவர்வதாக சுவாரஸ்யம் மிகுந்ததாக இருக்கவேண்டும்’ என்பார்கள். அதுவும் சரிதானே என்று பத்திரிகையை வெகு ஜனரசனைக்கு ஏற்றவாறு மாற்றுவார் பத்திரிகையை ஆரம்பித்த எழுத்தாளர்.

அதன் பிறகும் விற்பனை என்னவோ - கூடாது என்பதோடு மேலும் குறையவும் ஆரம்பிக்கும். ஆலோசனைகளை அற்புதமாக வழங்கும் கெட்டிக்கார நண்பர்கள். அதற்கும் ஒரு சமாதானம்

126