பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/134

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வல்லிக்கண்ணன்

சொல்வார்கள். ஏற்கனவே இலட்சக்கணக்கில் விற்பனையாகும் பத்திரிகைகள் ஐம்பது அறுபது வருடங்களாக வந்து கொண்டிருப்பவை. ஐம்பது வருடங்களில் படிப்படியாக வளர்ந்து இரண்டு இலட்சம் பிரதிகள் விற்பனை என்ற சாதனையை அடைந்துள்ளன. நம்முடையது நான்கு மாதப் பத்திரிகைதானே!” என்பார்கள்.

மொத்தத்தில் - முதலில் விற்பனை இல்லை என்ற ஒரு குறையோடு மட்டுமிருந்த அந்தப் பத்திரிகை கடைசியில் மூட வேண்டிய நிலை வரும் போது விஷய கனத்தையும் இழந்து வெகுஜனரசனை என்ற பெயரில் தனது தரத்தையும் இழந்ததாகிவிடும். அப்போதும் நண்பர்கள்- காரணம் சொல்வதில் சளைக்க மாட்டார்கள். "ஆரம்பித்தபோது நன்றாகவே இருந்தது. போகப்போக ஆரம்பத்தில் இருந்த இலட்சியப்பார்வை - இலக்கியத்தரம் இதழுக்கு இதழ் குறைந்து விட்டது. அதனால் இது என்ன கேரக்டர் உள்ள பத்திரிகை என்ற அடையாளமே வாசகர்களுக்குப் பிடிபடாமல் போய்விட்டது. அதுதான் காரணம்" என்பார்கள்.

பல்வேறு ஏடுகளில் பணிபுரிந்து - சம காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட எழுத்தாளர்களின் சொந்தப்பத்திரிகைகள் ஏன் நிலைக்கவில்லை; நீடிக்கவில்லை என்பதை எல்லாம் சி.சு. செல்லப்பா அனுபவப்பூர்வமாக தெளிவாக அறிந்து வைத்திருப்பார் போலிருக்கிறது.

அவர் சொந்தத்தில் ஆரம்பித்த 'எழுத்து' மாத இதழின் முதல் இதழிலேயே இரண்டு நிபந்தனைகளை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவை என்ன?

“எழுத்து இரண்டு நிபந்தனைகளுடன் வெளிவருகிறது. 2000 பிரதிகளுக்குமேல் அச்சாகாது. நேரில் சந்தாதாரர்களாகச் சேருபவர்களுக்குத்தான் கிடைக்கும் என்ற அறிவிப்புகள் நூதனமானவைதான்.

வாசகர்களின் தொகையைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்காக அல்ல; இலக்கிய வாசகர்களைத் தேடிப்பிடிப்பதுதான் 'எழுத்து'க்கு நோக்கம்.

127