பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/138

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வல்லிக்கண்ணன்

பரிசளித்து வந்திருப்பதாகத் தோன்றுகிறது. பிற இந்திய மொழிகளில் இந்த மூன்று நூல்களையும் மொழிபெயர்த்து தந்தால் இன்றைய தமிழில் நல்ல இலக்கியம் எதுவுமே இல்லையோ என்று பிறர் நினைக்க இடம் இருக்கிறது.

இந்த வருஷப் பரிசுப்பட்டியலைப் பார்க்கும்போது மற்ற மொழிகளில் இலக்கிய முயற்சிகளுக்குப் பரிசு அளித்திருக்கிறார்கள் என்றும் தமிழுக்கு மட்டுமே இது நேர்ந்திருக்கிறது என்பதும் தெரிகிறது. அந்த நூல்களின் தராதரங்கள் நமக்குத் தெரியாது. ஆனால் சிறுகதை நாவல் நாடகம் முதலிய நூல்களுக்குப் பரிசளித்திருக்கிறார்கள். தமிழ் நூல் மட்டுமே இராமாயணத்தைத் திருப்பிக் சொல்லுகிற நூலாக, இலக்கிய சிருஷ்டி என்று சொல்ல முடியாத வகையிலே அமைந்திருக்கிறது. இப்படிப் பரிசளித்திருப்பது இலக்கிய வளர்ச்சிக்கு உதவியது ஆகாது. இந்தப் பரிசுகள் எப்படி அளிக்கப்படுகின்றன என்பது மர்மமாகவே இருக்கிறது. இடையில் இரண்டு வருஷங்கள் தமிழுக்குப் பரிசு தாராதிருந்துவிட்டு மூன்றாவது வருஷம் இந்நூலைத்தேர்ந்து எடுத்தது சரியல்ல என்றே சொல்லவேண்டும். தமிழ் இலக்கியத்தில் இன்றைய வளர்ச்சிக்கு அடிகோலித்தந்த காலஞ்சென்ற புதுமைப்பித்தன், வையாபுரிப் பிள்ளை இவர்களுக்கோ அல்லது இன்று இலக்கிய வளர்ச்சியை சிறுகதை நாடகம், நாவல், விமர்சனம், சரித்திரம் முதலிய துறைகளில் சாத்தியமாக்கும் ந. பிச்சமூர்த்தி, சிதம்பரசுப்ரமணியன், லா.சா.ராமாம்ருதம், ஆர். ஷண்முக சுந்தரம், கு. அழகிரிசாமி, சங்கர்ராம் இவர்களில் யாருக்காவது பரிசை அளிக்கலாமே.

சர்வ ஜனரஞ்சகமாக உள்ள பத்திரிகை எழுத்துக்குத்தான் சாகித்ய அகாடமியின் தமிழ்ப்பரிசு அளிக்கப்படும் என்றுதான் நாம் நம்பவேண்டுமா? இந்தக்குறைபாட்டுக்குக் காரணம் சாகித்ய அகாடமித் தமிழ்க்கமிட்டியில் பத்திரிக்கைகாரர்களும் பேராசிரியர்களும் மட்டுமே இடம் பெற்றிருப்பதுதான் என்று சொல்லவேண்டும்” - என்பதாக எழுதியிருக்கிறார் க.நா.சு.

க.நா.சு. வின் கட்டுரையை இன்று படிக்கும் எவருக்கும் ‘சாகித்ய அகாடமி பரிசு' என்பது இன்றுமட்டுமல்ல; அன்றும், என்றும் பெரும்பாலும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கின்றது என்பது தெளிவாகும்!

131