பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/145

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எழுத்து - சி.சு. செல்லப்பா

விளக்கி ஏறத்தாழ இரண்டு பக்கம் கொண்ட மிக நீண்ட கடிதம் அல்லது கட்டுரை ஒன்றினை ஆசிரியருக்குக் கடிதங்கள் பகுதியிலேயே எழுதியிருக்கிறார்.

2000-மாவது ஆண்டில் தமிழ் இலக்கிய உலகில் ஒரு சர்ச்சை எழுத்தாளர்கள் மத்தியில் பலமாக உருவாகியிருந்தது. சிறந்த சிறுகதைகளைத் தொகுத்துத் தருபவர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன என்பது பற்றிய சர்ச்சையே அது. சாகித்ய அகாடமி சார்பாகத் தொகுக்கப்பட்ட தமிழ்ச் சிறுகதைகள் பேரால் நடந்த அந்தச் சர்ச்சையில் சுவை - பயன் ஆகியவைகளை விட அதிகமாக சூடும் இருந்தது.

சிறந்த தமிழ்ச்சிறுகதைகள் என்பதாக எழுத்து முதல் இதழில் க.நா.சு வெளியிட்ட பெயர்ப்பட்டியல் , அதற்கு பதிலளித்து சாமிநாத ஆத்ரேயன் எழுதிய கடிதம்; அதனையொட்டி ஆசிரியர் செல்லப்பாவே க.நா.சுவின் கட்டுரை மீதான தமது அபிப்பிராயங்களை வாசகர் கடிதப் பகுதியில் எழுதியிருப்பது ஆகியவற்றையெல்லாம் படிக்கும் எவருக்கும் -2000இல் மட்டும்தான் என்பதில்லை. 1950களிலேயே சிறந்த சிறுகதைகள் என்று பட்டியலிடுவது பற்றி பெரிய அளவில் சர்ச்சை இருந்திருக்கிறது என்பதை அறிய வியப்பு மேலிடாமல் இராது. சாமிநாத ஆத்ரேயன் எடுத்த எடுப்பிலேயே க.நா.சுவை கண்டனக் கணைகளால்துளைத் திருக்கிறார்.

"திட்டவட்டமாக அடம் பிடித்த பேச்சாக ஒன்றைச் சொல்லி நிறுத்திக்கொண்டு விடும் முறைக்கு எடுத்துக்காட்டாக எழுத்தின் முதல் இதழ் ‘சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்' என்ற கட்டுரையைத் தாங்கி வருகிறது. அந்தக்கட்டுரையில் ஆரம்பம் முதல் ஒரே சித்தாந்தங்கள் தாம்.

அங்காடிக் கூடைக்காரன் நிறைகல்லுக்குபதிலாக காராக் கருணைத் துண்டுகளை - அரைவீசை - ஒரு வீசை என்று சாதிப்பது மட்டுமல்லாமல் - அதை நிறையாக வைத்துக்கொண்டு மற்றவைகளை நிறுக்க முயல்வது போல் இருக்கிறது அக்கட்டுரையின் தோரணை. ஒரு தீர்மானம்; அப்படித்தீர்மானம் செய்ய தன் மனத்தெளிவில் உள்ள அளவற்ற நம்பிக்கை இவை தான் தொனிக்கின்றன.

138