பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3

செல்லப்பாவுக்கு அவருடைய தகப்பனார் மீது மிகுந்த பற்றுதலும் பாசமும் பெருமையும் இருந்தன. அவருள் தேசபக்தியை, காந்தி ஈடுபாட்டை, சுதந்திரத்துக்காகப் போராட வேண்டும் என்கிற உணர்வை தகப்பனார் எப்படியெல்லாம் தன்னுடைய சின்ன வயசிலிருந்தே வளர்த்து வந்தார் என்பதை செல்லப்பா அடிக்கடி சொல்வது உண்டு. ஒவ்வொரு சந்திப்பின் போதும் குறிப்பிட்டு மகிழ்வார். அவருடைய இறுதிக்காலத்திலும் உள நெகிழ்ச்சியோடு என்னிடம் நினைவுகூர்ந்தார். அவரது மகத்தான நாவலான சுதந்திர தாகம் மிலும், ‘என் சிறுகதைப்பாணி' நூலிலும் இவ் உணர்வுகள் வெளிப்பட்டிருப்பதைக் காணலாம்.

1974ல் 'எழுத்து பிரசுரம்' களை கல்லூரிகளிலும் மேல் நிலைப்பள்ளிகளிலும் விற்பனை செய்வதற்காக செல்லப்பாவும் நானும், இரண்டு மாதகாலம், திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றினோம். துத்துக்குடியில் நாங்கள் அப்படி அலைந்த போது, அங்கே சிறுவயதில் அவர் கல்வி கற்ற பள்ளிக்கூடத்தை மகிழ்ச்சிப் பெருக்கோடு எனக்குக்காட்டினார். அவர் காலத்திய ஆசிரியர்களைப் பற்றியும் சொன்னார்.

பின்னர், தாமிரபரணி ஆற்றங்கரை ஊர்களானமுறப்ப நாடு, அகரம் என்ற இடங்களுக்கும் என்னை அழைத்துச் சென்றார். தூத்துக்குடி குடிநீர் குழாய்திட்ட வேலைக்காக அவருடைய அப்பா அக்கிராமங்களில் தங்கிப் பணிபுரிய நேர்ந்தது. தாமிரவர்ணி ஆற்றில் கிணறு வெட்டி, இருபத்து நாலு மைல் தூரத்துக்குக் குழாய் போடும் வேலை அவர் தந்தையின் மேல்பார்வையில் தான் நடைபெற்றது. அந்தக்காலத்தில் அவர்கள் வசித்த வீடு, சுற்றிய இடங்கள், பொதுப் பணித் துறையில் அப்பா நிறைவேற்றிய பணிகள், வெட்டப்பட்ட கிணறு, அங்கு குடிநீர்த்திட்டத்துக்காக அமைக்கப்பட்டபெரிய இரும்புக்குழாய்களை எல்லாம் செல்லப்பா உற்சாகத்துடன் எனக்குக் காட்டினார். தனது சிறுபிராய நினைவுகளில் வாழ்ந்து அவர் சந்தோஷம் கண்டார். அந்நாட்களில் குடியிருந்த வீட்டின் முன் நெடுநேரம் நின்று தனது நினைவுகளை உணர்ச்சி பரவசத்துடன் பேசினார்.

{{|8}}