பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/153

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எழுத்து - சி.சு. செல்லப்பா

வெளியிட்டு பத்திரிகை ஆசிரியரின் கதை பொறுக்கும் திறமை (?) யை மற்றவர்கள் சந்தேகிக்கும்படி ஏன் விடுகிறீர்கள்?”

பொதுவாக மேலே குறிப்பிட்டுள்ள வரிகளும் அதோடு சேர்ந்த மற்ற வரிகளும் ‘நாசூக்' கின்றி எழுதப் பட்டிருந்தாலும் கடிதக்கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டு பார்க்கலாம்.

ஜெயகாந்தனும்-பராங்குசமும் இந்த இரண்டு கதைகளை விட சிறந்த கதைகளை எழுதி இருக்கலாம்; இருக்கிறார்கள் என்பதையும் நான் ஒப்புக் கொள்கிறேன். இப்போது இரண்டு கதைகளைப் பற்றித்தான் பேச்சு. ஜெயகாந்தன் கதை எதனால் 'எழுத்து'க்கு ஈடுகொடுக்குமாறு அமையவில்லை, 'வெற்றியின் பண்பு' எதனால் சாதாரணப் பத்திரிகைக் கதை என்று எழுத்தாளர் 'ஜடாதரன்' விமர்சன வழியாகக் குறிப்பிட்டிருந்தால் அதைப்பற்றி மேலே விவாதிக்க முடியும். ஏன், இலக்கிய விமர்சனத்துக்கே அது பயன்பட்டிருக்கும். ஆனால் முடிவுகளை மட்டும் சொல்லிவிட்டு நிறுத்திக் கொண்டு திருப்தி அடைந்து விட்ட பின் அந்தக் கேள்விக்கு இடமில்லை.

ஒரு சிறுகதையின் தரத்தை நிர்ணயிப்பது எதைப்பொறுத்தது? அதன் கதையம்சத்தை பொறுத்தா? அல்லது அது பெற்றிருக்கும் உருவத்தைப் பொறுத்தா? அல்லது இரண்டும் சேர்ந்தா?

இரண்டும் சேர்ந்து என்றுதான் யாரும் பதில் சொல்வோம். விஷய சத்தும் உருவ அழகும் கொண்ட ஒரு படைப்புதான் சிறப்பானதாகும் என்பது கலை, இலக்கியம் சம்பந்தமாக பல்வேறு அபிப்ராயங்களுக்கிடையே முடிவு சமரச மனப்பான்மையாகச் செய்து கொள்ள வேண்டியதாகும்.

ஜெயகாந்தன் சிறு கதையின் கதையம்சம் பழசுதான். அந்தத் தன்மையை முன் வைத்து அது சாதாரணமானது என்று துக்கியெறிந்து விடலாம். ஏன், புதுமைப்பித்தனின் அகல்யை, சாபவிமோசனம் இவைகளையே தள்ளிவிடலாம். ஆனால் அது அவ்வளவோடுதான் நின்றுவிடுகிறதா? இந்தக்கதையை முழுக்கபகுப்புமுறை ஆராய்ச்சி செய்ய இங்கு இடமில்லை. ஆயினும் முதலாவதாக சிறுகதை என்ற ஒரு உருவத்துக்கு, நூற்றாண்டுக்கு மேற்பட்டகால அளவில் பல்வேறு சமயங்களில் பலர் கைகளில் அதற்கு உருவ அழகு ஏறி ஏறி தனி ஒரு அந்தஸ்து பெற்று விட்ட உருவத்துக்கு அது உதாரணமாகிறது.

146