பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/156

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வல்லிக்கண்ணன்

 வசப்படுத்தாவிட்டால் அவன்சிருஷ்டிகளால் என்னலாபம்?" என்று கேட்டிருக்கிறார் டி.எஸ். கோதண்டராமன்.

'எழுத்து' முதல் நான்கு இதழ்களில் கதைகள், கவிதைகள், கட்டுரைகள், புதுக்கவிதைகள், புத்தக விமர்சனங்கள் என்று பல அம்சங்கள் நிறைந்து காணப்பட்டாலும் விமர்சனமே எல்லாவற்றையும் விட சிறப்பாக மேலோங்கிக் காணப்படுகிறது!

செல்லப்பாவை நன்கு அறிந்தவர்கள் பலரும் "அவர் ஒரு முசுடு, பிடிவாத குணம் படைத்தவர், தான் சொல்கிற கருத்துக்கள் தான் சரி என்று சாதிக்க முனைபவர்" என்றெல்லாம் கூறுவதுண்டு.

'எழுத்து'வின் முதல் நான்கு இதழ்களும் “செல்லப்பாவை பற்றிய இந்தக் கருத்துக்கள் உண்மையல்ல; அவர் தன்னளவில் பிடிவாதமானவர் என்றாலும் - தமக்கு எதிராகப் பிறர் கூறும் கருத்துக்களை வரவேற்பவர், அப்படிக் கூறப்படும் கருத்துக்கள் அவருக்கு கோபத்தை உண்டு பண்ணும் அளவினதாக இருந்தாலும், அவைகளை அப்படியே தமது ஏட்டில் வெளியிட்டு - அதற்கான பதில்களை நாகரிகம் பிறழாத வகையில் சொல்லக் கூடிய பரந்த மனோபாவம் கொண்டவர்’ என்று மறுப்புக் கூறுவதுபோல் அமைந்திருக்கின்றன.

க.நா.சுவின் கருத்துக்களில் தமக்கு உடன்பாடில்லை என்பதை தலையங்கம் தனிக்கட்டுரைகள் மூலம் தொடர்ந்து செல்லப்பா விளக்கியபடியே இருக்கிறார்; க.நா.சுக்கு எதிரான கடிதங்களையும் அவர் வெளியிடத் தயங்கவில்லை. எனினும் இந்த முதல் நான்கு இதழ்களிலும் க.நா.சுவின் கவிதை கட்டுரைகளே நிரம்பி வழிகின்றன. முதல் இதழில் "சாகித்ய அகாடமி தமிழ்பரிசு", "சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்" "டாக்டர் சாமிநாதையர்" என்று க.நா.சு. எழுதிய மூன்று கட்டுரைகள், மயன் என்ற பெயரில் க.நா.சு. எழுதிய இரண்டு கவிதைகள், இரண்டாவது இதழில் க.நா.சு. எழுதிய “எஸ்.வையாபுரிப்பிள்ளை", 'மயன் எழுதிய தரிசனம்' என்ற கவிதை, மூன்றாவது இதழில் க.நா.சுவின் "விமர்சனத்தின் எல்லைகள்""‘மறைமலையடிகள்" நான்காவது இதழில் "திரு.வி. கலியாணசுந்தரனார்" “இலக்கியத்தில் விஷயமும் உருவமும்” மயன் எழுதிய 'போதுமோ' "விளையாடும் பூனைக்குட்டி” என்ற இரு

149