பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/166

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5


'எழுத்து’ - புதுக்கவிதை வளர்ச்சிக்காக இயக்கமாகவே நடத்தப்பட்ட ஏடு - என்று இன்று எழுத்துப் பற்றியும் செல்லப்பா பற்றியும் நினைவு கூர்பவர்கள் அனைவருமே போற்றுகிறார்கள். ஆனால் எழுத்து முதல் ஆண்டின் 12 இதழ்களிலும் செல்லப்பா - எழுத்து பத்திரிகையை நடத்துவதின் நோக்கம் விமர்சனங்களை வளர்ப்பது, இலக்கியம் பற்றிய பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் அவைகளைப்பற்றி உருவாகும் சர்ச்சைகள் மூலம் - வாசகர்களுக்கு நல்ல இலக்கியம் எது? நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கான பணிகள் - நோக்கங்கள்- செயல்பாடுகள் எப்படி இருக்கவேண்டும் என்று உணர்த்தும் நோக்கமாகவே இருந்து வந்தது.

இதனைப் 'புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்' எனும் நூலில் வல்லிக்கண்ணன் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

"முழுக்க முழுக்க கருத்து ஆழமும் கனமும் உள்ள ஒரு இலக்கியப் பத்திரிகையை ஒரு சோதனை முயற்சியாக நடத்த வேண்டும் என்ற எண்ணமே செல்லப்பாவிடம் மேலோங்கியிருந்தது என்று சொல்லலாம். அப்படிப்பட்ட சோதனைமுயற்சியில் இலக்கிய அபிப்பிராயங்களை எடுத்துச் சொல்வதுதான் முக்கியப்பணியாக இருக்க வேண்டும் என்ற நோக்கமும் அவருக்கு இருந்தது என்று கொள்ளலாம்" என்று குறிப்பிட்டிருக்கிறார் வல்லிக்கண்ணன்.

'எழுத்து' ஆறாவது இதழில் விமர்சனப்பாதையில் என்ற தலைப்பிட்டு ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறார் செல்லப்பா. அதிலே எழுத்து இலக்கிய விமர்சனத்துக்காகத்தான் ஆரம்பிக்கப்பட்டது என்பதை உறுதிப் படுத்தும் வகையில் கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறார்.

“இலக்கிய அபிப்பிராயங்களை எடுத்துச் சொல்வதைத் தான் தன் தலையாய நோக்கமாகக் கொண்டுள்ள 'எழுத்து' வில் வெளிவந்துள்ள கட்டுரைகளை இரண்டு விதமாக பிரிக்கலாம்.

இலக்கியப் படைப்பு சம்பந்தப்பட்ட பல்வேறு அம்சங்களைப் பற்றிப் பொதுப்படையாக ஆராய்வது ஒன்று.

159