பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4

சி.சு. செல்லப்பாவை நான் முதன் முதலாகப் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. 1945ஆம் வருடம். அப்போது திருச்சியில் இருந்து 28மைல்கள் தள்ளி உள்ள துறையூர் என்கிற சிற்றுரரில், 'கிராம ஊழியன்’ என்னும் மறுமலர்ச்சி இலக்கிய மாதம் இரு முறை இதழ்நடந்து கொண்டிருந்தது. அதில் நான் பணியாற்றி வந்தேன். அதே சமயம் என்னுடைய 'இதயஒலி' எனும் கையெழுத்துப் பத்திரிகையும் வளர்த்து வந்தேன். திருச்சி மாவட்ட கையெழுத்துப் பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைந்த ‘முதலாவது மாநாடு' நடத்தினார்கள். அதற்கு வரவேற்புக்குழுத்தலைவராக எனக்குபொறுப்பளித்தார்கள்.

ஸ்ரீரங்கம் ஊரில் நடைபெற்ற அம் மாநாட்டுக்கு ‘ஆனந்தவிகடன்' உதவிஆசிரியர் நாடோடி, ‘பாரததேவி' நாளிதழ் ஆசிரியர் கே. அருணாசலம், மணிக்கொடி எழுத்தாளர் 'சிட்டி’ பெ.கோ. சுந்தரராஜன் முதலியவர்கள் வந்திருந்தார்கள். சிட்டியுடன் அவர் நண்பர் செல்லப்பாவும் வந்தார். அப்போதுதான் முதன்முறையாக நான் அவரைப் பார்த்தேன். சிட்டி அறிமுகப்படுத்தினார். அவ்வளவு தான். செல்லப்பா அம்முறை என்னுடன் சகஜமாகப் பேசிப் பழகவில்லை.

அக்காலக்கட்டத்தில் சி.சு.செல்லப்பாவத்தலக்குண்டு ஊரில் வசித்து வந்தார். கையால்காகிதம்செய்து, 'தக்ளி'யில் நூல் நூற்பது போன்ற காந்தி வழிக்குடிசைத் தொழில் முயற்சிகளில் அவர் ஈடுபட்டிருந்தார். அவருடைய இயல்புகளில் இதுவும் சேரும். படிப்பு, எழுதுவது, இலக்கியம் பற்றிப் பேசுவது, பத்திரிகைகளில் வேலை பார்ப்பது என்பனவற்றில் அவர்காட்டி வந்த உற்சாகத்தையும் செயலூக்கத்தையும் கைத்தொழில் போன்ற இதர முயற்சிகளிலும் ஈடுபடுத்தி மகிழ்ந்தார்.

பஞ்சினால் அழகு அழகான சிறுபொம்மைகள், பறவைகள், முயல்குட்டி, நாய் போன்றவை செய்வதில் கைதேர்ந்தவர் அவர். நவராத்திரி சமயத்தில் பொம்மைக் கொலு வைத்து, வயர் மாட்டி சின்னச் சின்ன பல்புகள் கொண்டு அலங்காரம் செய்து

10