பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/172

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

சொற்பிரயோகங்கள் விரவிக்கிடக்கின்றன! இந்த விஷயங்களில் அவரது கருத்துக்கள் எந்த அளவுக்கு புதுமைப்பித்தனின் சோதனை முயற்சி அல்லது புரட்சிப் படைப்புகளோடு ஒத்துப்போவதாக இருக்கின்றன என்பதை அவர் எழுதிய புரட்சிப் படைப்பாளி என்ற தலையங்கம் எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.

“............. புதுமைப்பித்தனே தனக்கு நம்பிக்கை வறட்சி இருப்பதாககூறி இருக்கிறாரே என்று கேட்கலாம். ஆனால் சமூகத்தில் நம்பிக்கை வைத்து அதற்குக் கசையடி கொடுத்து அதைத் தூண்டி சொரணை பெறச்செய்யும் ஒரு ஆத்திரத்தைக் கொட்டத்தான் அந்த 'நம்பிக்கை வறட்சி' அவருக்கு உத்வேகம் அளித்தது. ஆனால்அந்த உத்வேகத்தில் அவர் தன்னை மறந்து விடவில்லை. அதாவது தன் கலைத்தன்மையைத் தளரவிடவில்லை.

அவருக்கு முன் ராஜமையர், மாதவையா, பாரதியும் கூட, ஆகியோரைப் போலன்றி, அவரது எழுத்துக்களை எந்தக் குறிப்பிட்ட சித்தாந்தத்துக்கும் நம்பிக்கைக்கும் ஆதரவாகவோ, எதிரிடையாகவோ உபயோகப் படுத்திக் கொள்ளமுடியாத ஒரு சுத்தக் கலைஞன் புதுமைப்பித்தன்.

எனவே 'வேதாந்திகள் கைக்குள் சிக்காத கடவுள் மாதிரி நான் பிறப்பித்து விட்டவைகள்'என்று தன் எழுத்துக் களைப்பற்றி அவரே சொல்லி இருக்கும் படைப்புகள், அவநம்பிக்கை, நம்பிக்கை வறட்சி, கசப்பு இவைகளுக்கும் மேலாக எழுந்து, வாழ்க்கையை ஆழ்ந்து ஒரு அனுதாபத்துடன், அபிமானத்துடன், மனிதன் மனிதனாக வாழ மறந்து விட்டதைக் குத்திக்காட்டி அடிப்படைகளை உணரச்செய்ய வலியுறுத்தும் ஒரு கண்டிதத் தோரணையில் அமைந்தவை.

‘கலைஞன் தனக்குக் கொள்கையே கிடையாது என்று சொல்லித் தப்ப முடியாது’ என்று கு.ப.ரா சொன்னது போல புதுமைப்பித்தனுக்குத் திட்ட வட்டமான நோக்கம் உண்டு. ஆனால் அந்த நோக்கம் ஒரு தீர்க்கதரிசனப் பார்வை அல்ல. எதிர்காலக் கனவும் அல்ல. உடனடியாக, இன்றே, இப்போதே என்பதை வலியுறுத்துவதாக இருக்கிறது.

தன்நோக்கம் தன்னை வெளிக்காட்டிக்கொடுத்து விடாதபடி, கலைத்தன்மைக்குபின் மறைந்து நிற்கச் செய்ய, ஒரு கலைஞனுக்கு உரிய இயல்பான திறமை அவருக்கு இருந்தது.

165