பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/176

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6


"எழுத்து இரண்டு நிபந்தனைகளுடன் வெளிவருகிறது. 2000 பிரதிகளுக்குமேல் அச்சாகாது. நேரில் சந்தாதாரராகச் சேருபவர்களுக்குத்தான் கிடைக்கும் என்ற அறிவிப்புகள் நூதனமானவை தான்.

வாகசர்களின் தொகையைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்காக அல்ல. இலக்கிய வாசகர்களைத் தேடிப்பிடிப்பதுதான் 'எழுத்து'க்கு நோக்கம். ஏனெனில் 'பிடித்தமானது' என்ற சாக்கில் பொது வாசகர்களைத் திருப்திப்படுத்துவதற்கான வழிகளைக் கையாளும் உத்தேசம் 'எழுத்து'க்கு இல்லை. "எழுத்து’ எனக்குப் பிடித்திருக்கிறது" என்று சொல்லக்கூடிய வாசகர்கள் எங்கெங்கே இருக்கிறார்களோ, அவர்களை எழுத்து தேடும்”.

என்பதாக பிடிவாதக்காரர் என்று எல்லோராலும் கருதப்பட்ட செல்லப்பா எழுத்துவின்முதல் இதழிலேயே தமக்கேயுரிய பிடிவாத குணத்தோடு எழுத்து ஏட்டிற்கான கொள்கையைப் பிரகடனம் செய்திருக்கிறார்.

இன்றும் செல்லப்பா போலவே கொள்கைப் பிடிவாதங்களுடன் சிலர் சிற்றிதழ்களை நடத்தி வருகிறார்கள். தனிச்சுற்றுக்கு மட்டும் என்ற அக்மார்க் தனிமுத்திரையுடன் எதிர்காலத்திலும் பலர் - புதிது புதிதாக சிற்றிதழ்களைத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவிட முன் வரக்கூடும்.

கொள்கைப் பிடிவாதத்துடன் நடத்தப்படும் சிற்றிதழ் எப்படி இருக்கவேண்டும்? எதை எதையெல்லாம் கொள்ள வேண்டும்; எதையெதையெல்லாம் தள்ள வேண்டும்? "இப்படித்தான் இந்தப் பத்திரிகை வெளிவரும்" என்று உயர்ந்த குறிக்ககோள்களுடன் - அழுத்தமான நம்பிக்கையோடு சிற்றிதழ் நடத்தினால் அப்படிப்பட்ட ஏடுகளுக்கு என்னென்ன கஷ்டங்கள் பத்திரிகையைத் தொடர்ந்து நடத்துவதில் ஏற்படும்? அப்படிப்பட்ட கஷ்டங்கள் ஏற்படாமல் தவிர்க்கவும் - ஏற்பட்டால் சந்தித்துச் சமாளிக்கவும் எந்தெந்த வழிகளில் செயல்படலாம் என்பதற்கெல்லாம் வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் அமைந்திருக்கிறது செல்லப்பாவின் எழுத்து.

169