பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/209

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

“செல்லப்பா எப்படி உங்களால் சாத்தியமாகிறது" என்று கேட்க முடியமா? அவ்வளவு துணிச்சல் எனக்கேது? "அது என் சொந்த விஷயம் இலக்கியம் பேசவந்தீர்களா, வம்பு பேசவந்தீர்களா?” என்று கேட்டு விட்டால்? கேட்பாரோ, மாட்டாரோ ? செல்லப்பாவிடம் அந்த அத்து எனக்கு எப்பவும் உண்டு. நாக்குத் துடித்ததுடன் சரி.

'எழுத்து'வின் வெற்றி வேறு விதத்தில். விமர்சனத்தின் அந்தஸ்தை அது எடுத்துக் காட்டிற்று.

புதுக்கவிதை இயக்கத்துக்கு தொட்டில் என்கிற முறையில் எழுத்து என்றும் பேசப்படும். செல்லப்பா லட்சியவாதி. அவருக்கு அதுபோதும். இல்லை, அதுகூட அவருக்கு அவசியமில்லை. தனக்கு சரி, இல்லை, தன் மனச்சாட்சிக்கு சரியென்று பட்ட ஒரு காரியத்தில் ஈடுபட்டோம் என்கிற திருப்தி போதும்.

பிடிவாதம் வீம்பு - அரிச்சந்திரனிலிருந்து காந்தி வரை, ராமபிரானிலிருந்து துரியோதனன் வரை, பீஷ்மனிலிருந்து செல்லப்பா வரை நான் பூஜிக்கும் குணங்கள். இந்தக் குணங்களால் என்றுமே லாபம் இல்லை. நன்மை கூட இல்லை.

ஆயினும் அவை குணங்கள், அவையில்லாவிட்டால் முதுகெலும்பே இல்லை. Compromise செல்லப்பாவின் அகராதியிலே கிடையாது.

விமர்சனம் என்பது - இல்லை விமர்சனத்தைப் பற்றி நான் எண்ணுவதை, இடமும் நேரமும் கிடைத்தால் பின்னால் எழுதுகிறேன். உண்மையான விமர்ச்கனின் தகுதிகள் என்னவென்று எனக்குத் தெரியும்.

1. புத்தி கூர்மையிலும் கத்தி கூர்மை

2. நுனிப்புல் மேயாமை (பத்துப் பக்கங்கள் மேலெழுத்த வாரியாகக் கண்ணோட்டம் விட்டுவிட்டு, புத்தகத்தையே விமர்சனம் செய்யும் போலித்தனம் இல்லாமை)

3. எடையிலும் தராசிலும் துல்லியம்

202