பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/248

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

என்று இதைப்பற்றி நினைக்கத் தோன்றுகிறது. இந்தக் கவிதையை, வெளியிட வாய்ப்பு பெற்றதில் எழுத்துக்கு பெருமை.

‘நரகம்’ புதுக்கவிதையிலே ஒரு சோதனைமுயற்சி , வெற்றிகரமாக அமைந்த நல்ல சாதனை. நாகரிக நகரத்தில் திரியும் ஒருவனது உணர்வுக்கிளர்ச்சியை, காம உணர்வுதூண்டி விடும் உள்ளக் குழப்பத்தை, அதை வேதனையாக வளர்த்துவிடுகிற புறநிலைகளை, அவனுடைய ஏக்கங்களை விவரிக்கிறது இந்நெடுங் கவிதை, வர்ணனைகளும், புதுப் புது உவமைகளும் நயமாகச் சித்திரிக்கப் படுகின்றன இதில்.

உலக இலக்கியத்தில் புதுக்கவிதை பிரமாக்கள் தங்கள் படைப்புக்களில் பழங் கவிதைகளிலிருந்து சில சில வரிகளை, பொருள் பொதிந்த வாக்கியங்களை அப்படி அப்படியே எடுத்தாண்டு தங்களுடைய கற்பனையை வளரவிடுவதை ஒரு உத்தியாக அனுஷ்டித்திருக்கிறார்கள். சி. மணியும் இவ் உத்தியைத் திறமையாகக் கையாண்டு வெற்றிபெற்றுள்ளார். அவருடைய உவமைகள் புதுமையானவை.

‘காலத்தின் கீற்றுகள்
வாசமாவில் மறைவதென
உள்ளங்கைக் கோடுகள்
இருளில் மறையும் வேளை
தந்த துணிவு செங்கையை
உந்த நின்ற தையலர்
தலைவன் வரவும் சற்றே
உயரும் தலைவி விழியாக
மறைக்கும் சேலை சாண் தூக்கி,
காக்கும் செருப்பை உதறிவிட்டு
கடலுக்கு வெம்மை ஆட்ட
கிழக்கே அடிபெயர்ந்து
அலையை அணைக்கவிட்டார்
ஓரடி ஒளிரும் கால்கள்
மாசறு மதங்கள் போல
வானுக்கு வழிகாட்ட.’

241