பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/250

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்



‘இம் முயற்சி ஆற்றில் எதிர்நீச்சல் போடும் முயற்சி, பாதையில்லாக் காட்டில் பயணம் செய்யும் முயற்சி. இம்மாதிரி கவிதையின் அமைப்புமுறையில் அனுபவத்தால் மாறுதல் ஏற்பட்டுக் கொண்டே போகும். இலக்கண வரையறை என்று எதுவும் லேசில் அகப்பட்டுவிடாது என்பதும் எனக்குத் தெரிந்தது. இத் தொகுப்பிலும் அந்த மாறுதலைக் காணலாம். முடிவான முறையைக் கண்டு விட்டேன் என்று சொல்லமாட்டேன். மற்றபடிகவிதைகளின் வெற்றி தோல்விகளைப் பற்றி முடிவு செய்ய வேண்டியது என் வேலையன்று.

ஆனால் இரண்டொரு பொது விஷயங்களை மட்டும் கூறலாம். கவிதை கவிதையாக இருந்திருக்கிறது. வரலாறாக இருந்திருக்கிறது. மதத்தின் குரலாக இருந்திருக்கிறது. மனத்தின் குரலாக அதிகம் இருந்ததில்லை. மனத்தின் நுட்பமான அசைவுகளை வெளியிட்டால் சரியான அகத்துறை காணும் என்று தோன்றுகிறது. காதல் மட்டும் அகத்துறை என்று வகை செய்வது மன இயல் சாத்திரத்திற்குப் பொருந்தாது. இத்தொகுப்பில் கதைபோல் இருப்பவற்றில் கூட, கதைச்சுவையை விட தொனிச் சுவை ஓங்கி நிற்பதைக் காணலாம். எதிர் காலத்து நெடுங்கவிதை இந்தப் போக்கில் செல்லாமல் கதைச் சுவையை நம்பினால் கவிதை அம்சம் குன்றிவிடும். கவிதை இனி நாவலுடனோ நாடகத்துடனோ போட்டியிட முடியாது. புதுக்கவிதைக்கு ஏற்ற வாழ்நிலை ஏற்பட்டு விட்டதை நாம் மறக்கக் கூடாது. அச்சுயந்திரமும் லைப்ரரிகளும், மெளன வாசிப்பும் தோன்றிய பிறகு, - அவை தோன்றாத காலத்தில் அமல் செலுத்திய கேள்வி மரபும் ஸ்தூலக்காதின் ஆட்சியும் கண்ணெதிரே மறைந்து வருவதைக் கண்ட பிறகு - கவிதையை வேறு விதமாக அமைக்க ஏன் முயலக்கூடாது?

ஸ்துலமான சொல்லுக்கும் நயத்திற்கும் அப்பாற்பட்ட பொருளும் அமைதியும் உண்டு என்பது என் நம்பிக்கை. அந்த அடிப்படைகளைத் தொட்டு நான் கவிதையை அமைக்க முயன்றிருப்பதால் பருந்தும் நிழலும் போலுள்ள இசையை இவற்றில் காணலாம். ஸ்துலத்தை விட சூக்குமத்திற்கு அதிக சக்தி உண்டென்று அணுயுகம் நமக்குக் காட்டி விடவில்லையா?