பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/280

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

நடந்திருக்கிறது. இந்தப்படத்தையும் அந்தப் படத்தையும் பார் என்று மனிதன் கண்களுக்கு முன்னே கண்ணாடி காட்டத் தோன்றுகிறது. புழுதியால் பார்வையை மறைத்துக்கொண்ட மனிதன் புழுதி விலக்கி கண்விழித்துப் பார்க்கப் போகிறானா அவனால் முடியமா என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு உலக மனிதன் இன்று தன்னை இழந்து நிற்கிறான்!

சென்ற உலக யுத்தத்துக்குப் பின் மனிதன் விழித்துக் கொண்டிருப்பான் என்று எதிர் பார்த்தது எவ்வளவு ஏமாற்றமாகி விட்டது! மேற்கே உதயமாயிற்று கலாச்சார உலுக்கல். 'ஆண்டிரண்டு ஓடு முன்னே தத்துவங்கள் பொய்க்கக் கண்டேன். பல தத்துவங்கள் கவிழக் கண்டேன்’ என்று புதுக்கவிதை முதல்வன் பாடின மாதிரி அடிப்படை சிதற, மரபு அழிய, ஆளுமை குலைய, மேற்கத்திய மனிதன் ஹிப்பியாகி நம் கோவா கடற்கரைக்கு வந்து ஆண் பெண் சரிநிகர்சமானமாக நிர்வாணமாக தொத்து நோய் பயமுறுத்தலாக, அலைகிறதுதான் நாம் பார்ப்பது. பெருமழை வந்து ஒரேயடியாக அழித்து விட்டாலும் தேவலை என்று மனம் முறிந்து நினைக்கும் படியாக துவான சித்ரவதைகளை கணம் கணமாய் அநுபவிக்கிறது மானிடம். இதிலிருந்து என்று அது தப்பப்போகிறதோ யார் சொல்ல முடியும்.

மனித வாழ்வுதான் இப்படி இருக்கிறது என்றால் மனிதன் படைக்கும் இலக்கியம்? இலக்கியத்தின் பலனைப்பற்றி பேசிப்பேசி வாயலுத்துவிட்டது போலிருக்கிறது. இன்றய இலக்கியப் படைப்புகளை பார்க்கிறபோது வாயடைத்துப்போய் நிற்கவேண்டிய நிலை. யதார்த்தம் என்ற சொல்லுக்கு திருகிய அர்த்தம் ஏற்றி பசியின் பெயரால் கசப்பையும் வெறுப்பையும், தாம்பத்ய உறவின் பெயரால் காமத்தையும் இணை விழைச்சையும் பச்சையாக சொல்வதை கலை என்று பசுந்தோல் போர்த்த புலிப்படைப்புகள் அங்கே மலிந்து விட்டன. மனிதஜாதியின் ஆரோக்யமே கெட்டுக்கொண்டிருக்கிறது நாளுக்கு நாள். ஒரு மனிதனுக்கு மற்ற மனிதர்கள் எல்லோரும் மிருகங்கள் என்று தோன்ற அவனே மிருகமாகி விடுகிறான். அந்த மிருக சுபாவத்துக்கு மதிப்பு கொடுத்து அங்கே முளைக்கும் காளான் எழுத்துக்கள்.

273