பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/309

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா


இது வரையில் நாம் பார்த்த கதைகளில் 'படித்தபெண்' என்று நாம் தற்காலப் பார்வையில் கணிக்கத்தக்க பாத்திரம் எதுவும் காணவில்லை. பெண் சுதந்திரமாக, ‘பாரதி சொன்னது போல் 'ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்’ என்று அவரது புதுமைப்பெண்ணாக செயல்பட்ட பெண்ணை நாம் பார்க்கவில்லை. 'குளத்தங்கரை அரசமரம்' ருக்மணி, 'என்னை மன்னித்து விடு’ சீதா, 'மலரும் மணமும்' செல்லம், கேதாரியின் தாயார், தாய் ‘நூருன்னிஸாவின்' நூருன்னிஸா அந்திமந்தாரை காமாக்ஷி 'வேதாளம் சொன்ன கதை வேம்பு ஆகிய எல்லா பெண்களும் தாங்கள் இளைத்தவர்கள் என்பதை காட்டிக் கொண்டவர்கள். 'முள்ளும் ரோஜாவும்' கமலம் கூட - கொஞ்சம் தற்காலப் பெண் அதாவதுஅசட்டுத் தமிழ் நாவல்களை படித்தவள்கூட-ஒருநூலிழை தடம் பிசகியவள் தன்னை சுதாரித்துக் கொண்டு தன் பழய எல்லைக்குள் வந்து விடுகிறாள்.

அப்படிப்பட்ட பெண்களுக்குப்பின் வரும் குஞ்சிதம் பி.எ.எல்.டி.தான்தமிழ் சிறுகதை உலகில் முதல் படித்த பெண். சாவித்திரி, ஜோன் ஆஃப் ஆர்க் முதல் அமி மாலிசன்வரை தெரிந்தவள், முப்பதுக்கள் கால சாரதா சட்ட அமுலுக்கு ஏங்குபவள். விவாகரத்து வந்தாலும் நல்லது என்று கூட நினைப்பவள் 'இந்த மேல் நாட்டுப் படிப்பு பெண்களை புருஷர்களாக ஆக்கிவிடுகிறதே. தயவு செய்து பெண்கள் பெண்களாக இருங்கள்' என்று டாக்டர் பாஸ்கரன் கிண்டல் செய்வதை எதிர்த்து இங்கிலீஷ் படித்த புருஷர்களும் மனோ தைரியம் இழந்து பெண்களாகி விடுகிறார்கள் என்று பதில் சொல்கிறவள், 'பெண் கேட்பது ஓட்டு இல்லை, நீட்ஷே. சொல்கிறானேபெண் கேட்பதுசாட்டை, அதால் கொடுத்தால் சரியாகி விடும் என்கிற பாஸ்கரனுக்கு 'அதேநீட்ஷேயே சொல்கிறான். ‘புருஷன் குழந்தை, பெண்ணைக் கண்டு பயப்படும் என்று என்று எதிர் அடி கொடுக்கிறவள், ‘புருஷன் மாதிரி நானும் ஓடியாடி சம்பாதிக்கவா? சந்தி சிரிக்கும் போலிருக்கிறது என் பிழைப்பு, பெண்கள் வீட்டுக்குள்ளே இருப்பதற்குத்தான் லாயக்கா, இந்த பிழைப்பே வேண்டாம், என்று 'அந்தப்புரத்தில் கோஷாவாக இருந்து 'சாட்டை'யடி வாங்கவும் பிரியப்படும் அளவுக்கு மனப்பக்குவம் அடைகிறவள் குட்டையிலிருந்து தப்பி குளத்தில் விழவா என்கிற அதிர்ச்சிதான் இருந்த மரபான பழமைக்கு திரும்பச் செய்கிறது அவளை.

302