பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/316

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

வந்தார்கள். இப்பொழுது ஞாபகத்திலிருந்து சொல்லுகிறேன். அந்த அம்மாளுக்குச் சுமார் முப்பது வயதிருக்கலாம். உயர்ந்து வளர்ந்த அழகான ஸ்திரீ அவள் மெதுவாக ஒவ்வொர்.அடியெடுத்து வைத்து வந்த பொழுதும் கால் சலங்கை கலீர் கலீரென்று சப்தம் செய்தது. மூத்த பெண் அலிமா குட்டையாயும் ஸ்தூலமாயும் இருந்தாள். இளைய பெண் நூருன்னிஸாவோ குலாமைப் போலவே இருந்தாள்.

அப்பொழுது அவளுக்கு எட்டு வயது இருக்கலாம். இவ்வளவு வர்ணனை செய்கிற சக்தி எனக்கு அப்பொழுது இருந்ததா என்ற சந்தேகம் வேண்டாம். கிடையாது. ஆனால் என் மனத்தில் போட்டோ பிடிப்பது போல் பதிந்திருக்கிற அம்சங்களையே இப்போது எடுத்தெழுதுகிறேன்.

நூருன்னிஸாவின் உருவம் என்மனதில் வளர்ந்த சித்திரம்போல் நிற்கிறது. நான் முதல் முதலில் பார்த்த அன்று அவள் ஜரிகை மயமாய் இருந்த பச்சைப்பட்டுப்பாவாடை உடுத்தி இருந்தாள். லேசான மஞ்சள் பட்டு ரவிக்கையும் ரோஜாப்பட்டு தாவணியும் அணிந்திருந்தாள். காலில் காப்பு, பாதஸ்ரம், கையில் காப்புகள், விரல்களில் மோதிரங்கள். கர்நாடக முகம்மதியர் போல குருடு முதலியன இல்லை. முகம் என் மனதில் அப்படியே இருக்கிறது. நீண்ட புருவங்களும் தலைமயிரும் கன்னங்கறேலென்று இருந்தன. பின்னல் இல்லாமல் தலைமயிரை முடித்திருந்தாள். அது அவளுக்கு ரெம்ப அழகாக இருந்தது. அவள் உடலின் சிவப்புக்குச் சமானமே சொல்ல முடியாது. அவள்கண்கள்- அவற்றின் தன்மையை எடுத்துச்சொல்ல முடியவில்லை. வேண்டுமானால் தாமரை இதழ்கள் போன்றன, மீனுருவம் கொண்டன என்று' கவியைப்போல்சொல்லிக் கொண்டே போகலாம்.

கயாஸுடின். தன் மனைவியிடம் ஏதோ சொன்னார். அவள் என்னை ஒரு தரம் பார்த்து விட்டு அலிமாவிடம் ஏதோ சொன்னாள். அலிமா உள்ளேபோய் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளைகள் நிறைந்த ஒரு பையைக் கொண்டு வந்தாள். அதை என்னிடம் கொடுத்தபோது குலாமின் தாயினது முகத்தில் தோன்றிய அன்புப்பார்வையை நான் மறக்கவே முடியாது. என் கன்னத்தை ஒரு தரம் தாய்போலத் தடவிக் கொடுத்தாள்.

309