பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/320

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்


ஒரு நிமிஷம் அப்படியே நின்றோம். மறுநொடியில் மெதுவாகக் கையை விடுத்துக் கொண்டு போய் விட்டாள்.

மறுநாட் காலை நான் பயணத்திற்குத் தயாராக இருந்ததைக் கண்டு குலாமின் முகம் வாட்ட மடைந்தது.

‘என்ன சமாசாரம்’ என்றான்.

'அது தான் ஒருநாள் இருந்தாயிற்றே. மற்றொரு சமயம் சாவகாசமாகச் சந்திப்போம். எனக்குக் கொஞ்சம் காரியம் இருக்கிறது'. என்றேன்.

அரை மணிக்குள் அந்த பங்களாவை விட்டு வெளியேறி விட்டேன்.

திருச்சியில் காவேரிக்கரை ஓரத்தில் என் அறையிலிருந்து ஜன்னலின் வழியாகத் திரும்பவும் அதே சந்திரனை பார்த்துக் கொண்டிருந்தேன்? எவ்வளவு மாறுபட்ட மனோபாவத்துடன் கடிதத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தேன்.

‘இக் கடிதத்தை என் வாக்காகவும் என் அடையாளமாகவும் நீ வைத்துக் கொள்ளலாம். நாம் திருச்சியில் சிறு குழந்தைகளாக விளையாடினபோது என் மனதில் உன்னிடம் ஏற்பட்ட பற்று என்னை விட்டு இன்னும் அகலவில்லை. ஏனென்றால் சதா உன்உருவம் சிலைபோல் என் முன் நிற்கிறது.

நான் நித்ய இளமையோடு உன்னுடன் விளையாடுவது போலவே கனவு காண்கிறேன். உன்னை மற்றொரு முறை இந்த ஜன்மத்தில் பார்க்க வேண்டும் என்ற அவாவும் நிறைவேறிவிட்டது. இனி நாட்களை முன்பு ஜெபுன்னிஸா கழித்தது போலக்கழிக்கப் போகிறேன். என் தாயிடம் உனக்கு கல்யாணம் ஆகவில்லை என்று நீ சொன்னது எனக்குத் திருப்தியைக் கொடுத்தது. இனி மேல் நீ வேறொரு ஸ்திரீயிடம் ஈடுபடாமல் உன் வாழ்நாட்களை என் மனதோடு மட்டும் லயிக்கச் செய்து கழிப்பாயானால், நானும் சோர்வின்றி வாழ்வேன். அப்படியே செய்கிறேன் என்று நீ எனக்கு பதில் எழுதவேண்டாம். நீ செய்வாய் என்று எனக்கொரு தீவிர நம்பிக்கை இருக்கிறது. அதே என் உயிர்நாடி.

313