பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

அம்சம். அதிலே இலக்கியத் தரம், மனிதத்தன்மைத் தரம் இரண்டும் சொல்ல இயலாது. நீதிக்கதை, உபயோகமானது, அசுவாரசியமானது, சுவாரசியமானது என்று பிரிவுகள் வேண்டுமானால் சொல்லலாமே தவிர, இலக்கிய பூர்வமான தராதரம் சொல்ல இயலாது. கதை என்று பொதுப்படக் கவிதை, நாடகம், காவியம், வசன நூல்கள் பல இவற்றிற்கெல்லாம் ஆதாரமாக இயங்குகிற ஒரு அடிப்படைக் கோப்பு. ஆனால் சிறுகதை என்பதோவெனில் இலக்கியத்தில் ஒரு தனித்துறை. இந்தச் சிறுகதை என்கிற இலக்கியத் தனித்துறை உலக இலக்கியத்திலேயே தலையெடுத்துச் சுமார் நூற்றி முப்பது வருஷங்கள்தான் ஆகின்றன. எட்கார் ஆலன் போஎன்கிற அமெரிக்க இலக்கியாசிரியர் தோற்றுவித்த இலக்கியத் தனித்துறை இது. (ஆனால் ஆங்கில, மேலை நாட்டுப் பண்டிதர்களில் சிலரும்கூட இதை இவ்வளவு தெளிவாக ஏற்றுக் கொண்டு விடுவது கிடையாது. பைபிளில் இருக்கிறது சிறுகதை, கிரேக்க இலக்கியத்தில் உண்டு என்று பண்டிதர்களுக்கே உரிய பாணியில் அங்கும் சண்டைகள் உண்டு). இத்துறையில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ப்ரெட் ஹார்ட்டி, ஹாதார்ண் போன்ற அமெரிக்க ஆசிரியர்களும், ப்ரான்ஸ்வா காப்பி, மென்டெஸ், மோபாலான் போன்ற பிரெஞ்சு ஆசிரியர்களும், செக்காவ் போன்ற ருஷ்ய ஆசிரியர்களும் போற்றி வளர்த்து வளம் செய்தார்கள். இருபதாம் நூற்றாண்டிலே ஆம்பிரோஸ் பிர்ஸ், ஷெர்வுட் ஆண்டர்ஸன், ஹெமிங்வே, பாக்னர், வில்லியம் ஸ்ரோயன் போன்ற அமெரிக்கர்களும், லாகர்லெவ், வான் ஹெய்டன்ஸ் டாம், டாபெர்ஹால் ஸ்டிராம் போன்ற ஸ்வீடிஷ்காரர்களும், பிராண்டெல்லோ, பாலஸ்ெக்கி போன்ற இத்தாலியர்களும், கார்க்கி, ப்யூனின் போன்ற ருஷ்யர்களும், ஜாய்ஸ், ஒகானர் போன்ற ஐரிஷ்காரர்களும், காப்கா, தாமஸ் மான் போன்ற ஜர்மானியர்களும் அநடோல் பிரான்ஸ் போன்ற பிரஞ்சுக்காரர்களும் இலக்கிய அடிப்படையில் வளர்த்து வந்திருக்கிறார்கள். மேலைநாட்டு அவசர யுகத்தின் தேவைகள் பலவற்றால் ஆங்கிலத்திலும், வேறு ஐரேப்பிய மொழிகளிலும் பத்திரிகைகள் யுகமும் அவசர யுகமும் தோன்றிய பின், கதை, சிறுகதை என்கிற இலக்கிய உருவம் பெற்றுப்பின்னர் பத்திரிகைக்கதை என்று ஒரு தேய்வும் பெற்றது. இந்தப் பத்திரிகைக் கதைகளுக்குச் சிறந்த

45