பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

நூற்றுக்கணக்கான கதாசிரியர்கள் தோன்றினாலும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பத்திரிக்கைக் கதைகள் எழுதத்தான் முற்பட்டார்கள். அதுதான் லாபகரமாக இருந்தது. இந்தமோசமான நிலையிலே பழைய மணிக்கொடி கோஷ்டியினர் சிலரும், பின் வந்த மூவரும் தவிர வேறு யாரும் சிறப்பான சிறு கதைகள் என்று சொல்லும்படி எதுவும் எழுதவில்லை. ஆனால் சென்ற நாலைந்து வருஷங்களில் வந்த எழுத்துக்களில் பலவற்றைச் சலித்துப் பார்க்கும்போது இரண்டுபுதுப்பெயர்கள் கிடைக்கின்றன. ஒன்று சுந்தரராமஸ்வாமி - இவருடைய சிறு கதைகளில் ஒரு லேசான கிண்டலும் கேலியும், ஒரு தனித்துவ நோக்கும் காணக்கிடக்கின்றன. அவர் கடைசியில் எழுதியுள்ள நாலைந்து கதைகளில் அதி அற்புதமான உருவம் அமைந்திருக்கிறது. அதே போல ஜெயகாந்தன் என்ற ஒரு இளைஞர் எழுதுகிற சிறுகதைகளிலே சில நன்றாகவும் பல சிறுபிள்ளைத்தனமாகவும் இருக்கின்றன என்று சொல்லலாம். கிழவன் கிழவி பிணக்குக் கதை ஒன்றும், நந்தவனத்திலோராண்டி என்கிற சிறு கதையையும் நல்ல சிறு கதைகளாகச் சொல்லலாம்.

பழைய சிறுகதை ஆசிரியர்களில் ந.பிச்சமூர்த்தியின் சமீப காலத்திய சிறுகதைகள் பலவற்றில் உருவமும் அழகும் கூடியுள்ளன. செல்லப்பாவின் சிறுகதைகளிலே பகைப் புலம், பின்னணி அதிகமாகவும், விஷயத் தெளிவு குறைந்தும் காணப்படுகிறது. க.நா.சு.வின் சிறு கதைகளிலே சோதனை அம்சங்களும் தத்துவ அம்சங்களும் அதிகரித்துள்ளன. லா.ச.ராவின் கதைகளில் ஒரு உருவ அமைதி காணக் கிடைக்கிறது. சமீப காலத்திய தி.ஜானகிராமனின் சிறு கதைகளில் உருவம் தேய்ந்து பழங்கதைகளின் விஷயத்தின் நிழல்தான் ஆடுகிறது. கு.அழகிரிசாமி இந்த ஐந்தாறு வருஷங்களில் ஒரு சிறுகதைகூட எழுதியதாகத் தெரியவில்லை. சிறு கதை என்கிற இலக்கிய அந்தஸ்தை எட்டாத பத்திரிக்கைக் கதைகள் கூட பெரும்பாலும் இந்தக் காலத்தில் தரம் மிகக் குறைந்து 1948-க்கு முன் பத்திரிக்கைக் கதை எட்டிய தரத்தை எட்டவில்லை.

என்கண்ணில் படாத நல்ல சிறுகதைகள் தமிழில் இருக்கலாம் என்பதை நான் விவாத அளவில் ஒப்புக் கொண்டாலும் கூட கூடிய

55