பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பாரதிக்குப் பின்-1
டாக்டர் சாமிநாதையர்

கவி கப்பிரமணிய பாரதி பிறப்பதற்கு 27 ஆண்டுகளுக்கு முன்பிறந்த, பாரதியார். இறந்ததற்கு 24ஆண்டுகளுக்குப் பின் இறந்த டாக்டர் சாமிநாதையர் அவர்களைப் பாரதியாருக்குப் பின் என்கிற இலக்கிய வரிசையிலே முதலாவதாகச் சொல்வது மிகவும் பொருத்தமான விஷயம். தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்காலமாகிய இதை நாம்சாதாரணமாக பாரதியுகம் என்று கொண்டாடுகிறோம். சாமிநதையர் யுகம் என்றும் கொண்டாடலாம்.

பண்டைத்தமிழ்ச் செல்வங்களைத் தேடித்தந்து புதுத் தமிழ் வளத்துக்கு அடிகோலிய சாமிநாதையரின் இலக்கிய சேவைகளுக்கெல்லாம் வாரிசாகத்தான் இந்நூற்றாண்டின் தொடக்கத்திலே பாரதியார்தமிழ் வேகத்துடன் எழுதத் தொடங்கினார் என்று சொல்லுவது பொருந்தும். அதே போல பாரதியார் தந்த வசன வேகம் தமிழ்த் தாத்தாவையும் பாதித்தது. பிற்காலத்தில் சாமிநாதையர் எழுதிய பல வசன நூல்களும் பாரதியார் யுகத்தின் முத்திரை பெற்றவை.

டாக்டர் சாமிநாதையர் 1855ல் பிறந்தவர். 1871 முதல் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் சிஷ்யராக அமைந்து, 1876ல் அவர் இறக்கும் வரையில் அவரிடம் தமிழ்ப்பாடம் கேட்டார். மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை காலத்தில் ஆரம்பித்த திருவாவடுதுறைத் தொடர்பு அவருக்குப் பின்னரும் பிரயோசனப் பட்டது. மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் முதல் மாணவராகிய தியாகராஜச் செட்டியார் 1880ல் சாமிநாதையரை கும்பகோணம் அரசாங்கக் கல்லூரியில் தமிழ்ப்பண்டிதராக, தனது ஸ்தானத்திலே அமர்த்தினார். கும்பகோணத்தில் முனிசீப்பாக அக்காலத்தில் இருந்த சேலம் ராமசாமி முதலியார் ஐயரவர்களை சீவக சிந்தாமணியைச் சரிவரப்பதிப்பித்து அச்சேற்றும் வேலையை மேற்கொள்ளச்செய்தார். தியாகராஜச் செட்டியார். பூண்டி அரங்கநாத முதலியார் இவர்களுடைய பழக்கத்தினால் புஸ்தகங்களைப் பதிப்பிடும் காரியத்தைத் திறமையாகச்செய்யும் சக்தி சாமிநாதையருக்கு வந்தது.

67