பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பழைய முறையின் வரையறை

சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லார் எழுதியுள்ள உரையைப்பற்றி அபிப்ராயம் கூறுகையில் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையின் வரிகள் இவை :

‘இவரது உரையினால் தமிழ் உணர்ச்சியும் இசை, கூத்து முதலியன பற்றிய உணர்ச்சியும் மிகுந்தன். அணிகளின் இயல்புகளும் இவரால் அங்கங்கே விளக்கப்பட்டன. சில சில இடங்கில் சொற்களும் நயங்களும் எடுத்துக்காட்டப்பட்டன. இவைகளுக்கு மேலாகவுள்ள இலக்கிய நயம், கவிதை நயம் முதலியன இவரால் சிறிதும் புலப்படுத்தப்படவில்லை. முற்காலத்தே இவ்வகை நயங்களை உரைகாரர்கள் எடுத்துக் காட்டும் வழக்கமும் பெரும் பாலும் இல்லை.... உரைகளோவெனில், நூலிலுள்ள கொள்கைகளையும், நோக்கங்களையும், நியதிகளையும், இலக்கணங்களையும், அணிகளையும், எடுத்துக்காட்டுதலையே தமது முக்ய கடமையாகக் கொண்டன. ஆகவே, இசை யுணர்ச்சி, சரித்திர உணர்ச்சி, கதை நயம், சொல் நயம், நீதி, சமயத்துவம் முதலியவற்றுள் ஒரு சிலவற்றின் பொருட்டு, ஒவ்வொரு காலத்தில் இக்காவியம் தோன்றியது முதல் இன்று வரை பாராட்டப்பட்டு வந்துள்ள தெனலாம்.' (இலக்கிய மணிமாலை)

இலக்கிய மதிப்பீடு செய்வதில் புதிய, சத்தான நோக்கை கைக்கொள்ளவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி அவர் மேலும் கூறி இருக்கிறார் :

....... இவைகளை யெல்லாம் புறம்பே ஒதுக்கினால் அன்றி,சிலப்பதிகாரத்தின் இலக்கிய நயத்தையும் கலை நயத்தையும் கவித்துவ நயத்தையும் நாம் உணர்ந்து கொள்ள முடியாது. இந் நெறியில் நாம் இக் காவியத்தைக் கற்றால் தான் ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று ‘சுப்ரமண்ய பாரதி கூறியதன் உண்மை விளங்கும். இந் நெறி கையாளப்படுதற்குரிய காலமும் இந்த நூற்றாண்டேயாகும். ஏனெனின் இலக்கியங்களை இப் புதிய நெறியில் கற்று அநுபவிப்பதற்கு இக்காலத்து ஆங்கிலத்தில் உள்ள நூல்- மதிப்பு முறை பெரிதும் உதவவல்லது.