பக்கம்:ஏலக்காய்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

தான். பழைமையான இந்த விவசாயமுறையின் கீழ் அதிகப்படியான அளவிலே உற்பத்தி செய்யப்படும் செடிகள், விதை விதைத்து, முளை கிளம்பி, நாற்று பறித்து, பின்னர் நாற்றுக்களை மறுநடவு செய்து, அவற்றினின்றும் மரபுத் தோன்றல்களாக விளைச்சல் செய்யப்படுகின்ற செடிகளை முந்திக் கொண்டு பலன் தரவும் தொடங்கி விடுகின்றன என்பதும் யதார்த்தமான நடப்புத் தான்! — ஆனாலும், இத்தகைய இனப்பெருக்க முறையிலே, தொற்றிப் பரவும் நச்சு நோய்ப் பூச்சி புழுக்கள் மற்றும் நுண் கிருமிகளின் தாக்குதல்கள் பயங்கரமான சோதனைகளாகவே உருவெடுத்து அச்சுறுத்தின. நட்டு வளர்க்கப்பட்ட நடுத்தண்டுகள் ஆரோக்கியத்தை இழந்ததாலேயே, இவற்றின் வாயிலாக நோய் வளரவும் வாழவும் ஏதுவாகி, தடுப்புக்களையும் கட்டுப்பாடுகளையும் மீறின. ஆரோக்கியமற்ற இந்தப் பயங்கரச் சூழல், ஏல விவசாயிகளைக் கஷ்டப்படச் செய்ததோடு திருப்தி அடையாமல், நஷ்டப்படவும் வைத்துவிட்டது. ஆகவேதான், மற்றத் தாவரங்களைப் போலே ஏலச் செடிகளையும் இனவிருத்தி செய்யும் பண்டையப் பழக்கம் பெரும்பாலான ஏலச் சாகுபடிப் பகுதிகளிலே கைவிடப்படவும் நேர்ந்தது!


விதைப்பு முறை

இந்நிலையிலேதான், விதைப்பின் மூலம் ஏலச் செடிகள் உற்பத்தி செய்யப்படும் நவீன விவசாயச் செயல்முறை இப்போது ஏலக்காய்ச் சமூகத்தினரிடையே பரவலாகவும் பான்மையுடனும் பின்பற்றப்படுகிறது!

நல்ல விதைகள்தாம் நல்ல விளைச்சலைத் தரமுடியும். 5 ஆண்டு முதல் 8 ஆண்டு வரையிலும் நோய்ப் பீடிப்புக்கு இலக்காகாமல் ஆரோக்கியமாகப் பேணி வளர்த்துப் பாதுகாக்கப்பட்ட நல்ல மகசூலை நல்கும் உயர் ரக ஏலச் செடிகளினின்றும் உற்பத்தி செய்யப்படும் ஏலக்காய்களே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/29&oldid=505929" இலிருந்து மீள்விக்கப்பட்டது