இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இராமர் வனவாசம் செய்து கொண்டிருந்த காலம் அது. ஒரு நாள் இராமர் தன்னந் தனியாகக் காட்டில் சுற்றிக் கொண்டிருந்தார். மிக அலைந்ததனால் தண்ணீர்தவித்தது. குடிப்பதற்குத் தண்ணீர் எங்குக் கிடைக்கும் என்று நீர் நிலைகளைத் தேடி வேறு அலைந்தார். கடைசியில் பம்பாசரஸ் என்ற ஒரு குளத்தைக் கண்டார்.
குளத்தைக் கண்டதும் மிக அவசரமாக நடந்து சென்றார். குளத்தின் கரையில் தம் அம்பையும் வில்லையும் தரையில் ஊன்றி நிறுத்திவிட்டுக் குளத்தில் இறங்கினார். தவிப்பு அடங்கும் வரையில் குளிர்ந்த நீரை இருகையாலும் அள்ளியள்ளிப் பருகினார். பிறகு கரைக்கு ஏறி வந்தார்.