பக்கம்:ஏழாவது வாசல்.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66ஏழாவது வாசல்


திட்டமிட்டபடி அவன் ஒரு நள்ளிரவில் அரண்மனைக்குள் புகுந்தான். எப்படியோ அரண்மனைக் காவலாளிகள் கண்ணில் படாமல் உள்ளே நுழைந்து விட்டான். அரசனுடைய படுக்கையறை யருகிலும் சென்று விட்டான். அப்போது அரசன் அரசியுடன் பேசிக் கொண்டிருந்தான். பேசி முடித்து உறங்கட்டும் என்று திருடன் வெளியே ஓர் இருட்டு மூலையில் ஒளிந்து காத்துக் கொண்டிருந்தான்.

அந்த அரசன் தெய்வபக்தி யுடையவன். தெய்வபக்தியைக் காட்டிலும் அவனுக்கு அடியார் பக்தி அதிகம். அதாவது, தெய்வத்தை வணங்குகின்ற பக்தர்களை அந்த அரசன் தெய்வமாகவே எண்ணி வணங்குவான். அப்படிப்பட்ட அந்த அரசனுக்கு ஓர் அழகான மகள் இருந்தாள். இளவரசியான அந்த மகள் திருமண வயதை யடைந்தாள். அதனால் அவளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று அரசி ஆசைப்பட்டாள். ஆகவே, அவள் அன்று இரவு, தன் மகள் திருமணத்தைப் பற்றி அரசனிடம் பேசத் தொடங்கினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழாவது_வாசல்.pdf/68&oldid=994062" இலிருந்து மீள்விக்கப்பட்டது