பக்கம்:ஏழாவது வாசல்.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76 ஏழாவது வாசல்

“இவரில்லை.இவரில்லை" என்று சொல்லிக்கொண்டே மேலும் உள்ளே உள்ளே அழைத்துச் சென்றான் அரண்மனை வேலைக்காரன.

ஏழாவது வாசலைத் தாண்டியதும் அங்கே உண்மையான மன்னரே அமர்ந்திருந்தார். அவரைக் கண்ட மனிதன் “இவர்தாமா மன்னர்?” என்று கேட்கவில்லை.

அவருடைய மேன்மைத் தோற்றமும், வீரப் பொலிவும் அவர் தாம் மன்னர் என்ற ஐயத்திற்கிடமற்ற எண்ணத்தை யுண்டாக்கிவிட்டன. அவன் உள்ளத்தில் இவருக்குமேல் எவரும் இல்லை என்ற உணர்வைப் பதித்து விட்டன. ஒரு மாபெரும் தலைவர்முன் நிற்கிறோம் என்ற பேருணர்வு தோன்றியது.

அந்த நிலை தனக்குக் கிடைத்ததை எண்ணியெண்ணி, வியப்புற்றுப் பெருமகிழ்வு பொங்கி அவன் பூரித்துப் போய்ப்பேச்சில்லாமல் நின்றான்.

கடவுளின் உண்மையை உணர்ந்தவர்களுக்கு, ஆந்தக் கடவுள் தன்மையில் ஐயம் தோன்றுவதில்லை. அவர்கள் உறுதியாகக் கடவுளை உணர்ந்து விடுவதனால், "இது கடவுள் தானா?” என்று யாரையும் கேட்பதில்லை. இது கடவுள் தானா என்று கேட்கும் நிலையில் உள்ள எதுவும் உண்மையான கடவுள் ஆகா என்பதை இக்கதையிலிருந்து அறிகிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழாவது_வாசல்.pdf/78&oldid=994333" இலிருந்து மீள்விக்கப்பட்டது