பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மாணிக்கனார் வகுத்த எளிய உரை


டாக்டர் ச. மெய்யப்பன்


மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் உள்ளம், சொல், செயல்களால் தூயர். நாடு நலம் பெற நற்கருத்துக்களை நாளும் எண்ணி எழுதியவர். சிறுவர் நெஞ்சங்களில் நற்கருத்துக்கள் நாளும் விதைக்கப் பெறல் வேண்டும் என்ற நல்ல நோக்கினர். ஆத்திசூடி அமைப்பில் தமிழ்சூடி இயற்றிச் சிறுவர் உள்ளமும் வாழ்வும் செழிக்க வழிவகை கண்டவர். நல்ல கருத்துக்களைப் பரப்பும் நோக்கில் மாணிக்கக் குறள் இயற்றிய மாண்பினர். திருக்குறள் சிந்தனைகளைத் தெளிவாக உணர்த்த செவ்விய உரை கண்ட செம்மல்.

காரைக்குடியில் தமிழ்ச்சங்கம் அமைத்து அதன் தலைவராய் விளங்கிய மாணிக்கனார் தமிழ்ப் பாடல்களையும் நீதி நூல்களையும் சிறுவர்கள் நெஞ்சகத்தில் என்றும் நிலை நிறுத்த விரும்பினார். ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நறுந்தொகை, மூதுரை, நல்வழி, நன்னெறி, உலக நீதி ஆகிய நூல்களுக்கு எளிய தெளிவுரை வகுத்துத் தமிழ்ச் சங்க வெளியீடாகப் பல பதிப்புக்கள் வரச் செய்தார். தமிழ்ச்சங்கம் மூலம் நீதி நூல் ஒப்புவித்தல் போட்டி நடத்தி ஆண்டுதோறும் சிறுவர்களுக்குத் தொடர்ந்து பரிசுகள் நல்கினார். வளரும் பயிருக்கு உரமும் நீரும் ஒளியும் அளித்துக் காப்பதில் வல்லவர். செறிவு நடையும் புலமை நடையும் வல்ல மாணிக்கனார் சிறுவர் பொருட்டு மிக மிக எளிய தமிழில் பழகு நடையில் உரை வகுத்துள்ளார்.

நீதி நூல் கருத்துக்கள் பரவ வேண்டும் என்ற எண்ணத்திற்குச் செயல் வடிவம் கொடுத்தார். காரைக்குடி தமிழ்ச் சங்கத்தைப் பயன்படுத்திக் கொண்டார்; பயிற்றுவித்தார்; பரிசுகள் நல்கினார். நீதி நூல்களுக்கு எளிய உரை வகுத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/12&oldid=1456896" இலிருந்து மீள்விக்கப்பட்டது