உரை
15. வேங்கைப் புலியின் நோயைத் தீர்த்த விட வைத்தியன் அப்பொழுதே அப்புலிக்கு இரையானாற்போல, தீயவர்க்கு உதவி செய்யின் அவர் தமக்குச் செய்த உதவியை மறந்து அப்பொழுதே கேடு செய்வர். -
16. கொக்கு தனக்கேற்ற பெரியமீன் வருமளவும் அமைதியாக இருப்பது போலப் பெரியவர்களும் தமக்கு ஏற்ற காலம் வரும் வரை அடங்கியிருப்பார்கள். அடக்கத்தை அறியாமை என்று நினைத்து அவர்களை வெல்ல நினைப்பவன் தோற்றுப்போவான்.
17. நீர்வற்றியவுடன் குளத்தினின்று நீங்கிப் போகும் நீர்ப்பறவை போன்று நமக்குத் துன்பம் வரும்போது நம்மை விட்டு நீங்குபவர் உண்மையான உறவினர் ஆகார். அக்குளத்தில் உள்ள கொட்டியும், அல்லியும், நெய்தலும் போலத் துன்பத்திலும் பங்கு கொள்பவரே உண்மையான உறவினர் ஆவார்.
18. பொற்குடம் உடைந்தாலும் பொன்னாகிப் பயன் தரும். அதுபோல் மேன்மக்கள் வறுமை அடைந்தாலும் மேன்மைக் குணத்திலிருந்து மாறுபடார். மண்ணால் ஆகிய குடம் உடைந்தால் ஒன்றுக்கும் பயன்படாது. அதுபோல, கீழோர் வறுமை அடைந்தால் மேலும் கீழ்மைக் குணம் உடையவராவர்.
19. அளவற்ற நீர் உடைய கடலுள் ஒரு படியை ஆழ அமுக்கி முகந்தாலும் அது நாலுபடி நீரை மொள்ளாது. அதுபோல, ஒரு பெண்ணுக்கு மிக்க பொருளும் தக்க கணவனும் கிடைத்தாலும் பழவினையின் அளவன்றி மிகுதியாய்த் துய்க்க முடியாது.
20. உடம்புடன் பிறந்த நோயே உடலை அழிப்பது போல உடன் பிறந்தவர்களே நமக்குத் தீங்கு செய்வதுண்டு. நமக்குத் தொடர் பில்லாத மலையில் தோன்றிய மருந்து நம் நோயைத் தீர்ப்பது போல, நமக்கு அயலவர்களால் நன்மை விளைவதும் உண்டு.
21. நற்குணமும் நற்செயலும் உடைய மனையாள் வாழும் வீட்டில் எல்லா நன்மையும் நிறைந்திருக்கும். மனைவி இல்லாவிடினும், மனைவி கடுஞ் சொற்களைப் பேசுபவளாக இருப்பினும், அவ்வீடு புலி வாழும் புதருக்கு ஒப்பாகும்.
22. நல்ல பயனைப் பெறலாம் என்று நினைத்துக் கற்பக மரத்தை அடைந்தோர்க்கு அது கொடிய கசப்புடைய எட்டிக் காயைக் கொடுக்குமாயின் அதற்குக் காரணம் முற்பிறப்பிற் செய்த தீவினையேயாகும். ஆதலால் மனமே, நீ நினைத்தபடி
ஒன்றும் நடவாது. ஊழின்படியே நடக்கும்.