பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மூதுரை
 

தீயோர்க்கு உதவின் தீங்கே வரும்

15. வெங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடதாரி
ஆங்கதனுக் காகாரம் ஆனாற்போல் - பாங்கறியாப்
புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல் இட்ட கலம்

அடக்கத்தை இகழாதே

16. அடக்க முடையார் அறிவிலரென் றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தலையில்
ஒடுமீன் ஓட உறுமின் வருமளவும்
வாடி யிருக்குமாம் கொக்கு.

உண்மையான உறவினர்

17. அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு.

கெட்டாலும் மேன்மக்கள் குணம் மாறார்

18. சீரியர் கெட்டாலும் சீரியரே சீரியர்மற்
றல்லாதார் கெட்டாலங் கென்னாகும் - சீரிய
பொன்னின் குடமுடைந்தாற் பொன்னாகும் என்னாகும்
மண்ணின் குடமுடைந்தக் கால்.

ஆசையாற் பயனில்லை

19. ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நானாழி - தோழி
நிதியுங் கணவனும் நேர்படினும் தந்தம்
விதியின் பயனே பயன்.

உடன்பிறப்பும் அயலாரும்

20. உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன்பிறவா
மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரு முண்டு.

மனையாளும் மனையும்

21. இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை
இல்லாளும் இல்லாளே யாமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும். -

ஊழின்படியே நடக்கும்

22. எழுதியவாறேகாண் இரங்குமட நெஞ்சே
கருதியவா றாமோ கருமம் - கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்திற் செய்த வினை.

 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/37&oldid=1332726" இலிருந்து மீள்விக்கப்பட்டது