பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

உரை



மூதுரை

23. கோபத்தினால் வேறுபட்ட விடத்துக் கீழ்மக்கள் கல்லின் பிளவைப் போல் மீண்டும் ஒன்று கூடார்; இடையாயர் பொன்னின் பிளவைப் போல் ஒருவர் கூட்டக் கூடுவர்; சான்றோர் நீரின் பிளவு போலப் பிரிந்த உடனே தாமே கூடுவர்.

24. தாமரைப்பூவை அன்னம் சேர்ந்தாற் போலக் கற்றவரைக் கற்றவரே விரும்புவர், இடுகாட்டில் உள்ள பிணத்தைக் காக்கை விரும்புவது போலக் கல்வியில்லாத மூடரை மூடரே விரும்புவர்.

25. நஞ்சுடைய நாகப்பாம்பு மறைந்து வசிக்கும். அது போல நெஞ்சில் வஞ்சனையுடையவர் தம்மை ஒளித்து ஒழுகுவர். நஞ்சில்லாத தண்ணிர்ப் பாம்பு அஞ்சாமல் கிடக்கும். அதுபோல வஞ்சனையில்லாதவர் வெளிப்படையாக ஒழுகுவர்.

26. அரசனுக்கு அவன் நாட்டில் மட்டும் சிறப்பு உண்டு. கற்றோர்க்கு அவர் செல்லும் எல்லா நாடுகளிலும் சிறப்பு உண்டு. ஆதலால் மன்னனினும் கற்றவர்க்கே சிறப்பு மிகுதி.

27. படியாதவர்க்குப் படித்தவரின் உறுதி மொழிகளும். அறநெறியில் நில்லாதவர்க்கு அறமும், வாழை மரத்திற்கு அது ஈன்ற காயும், கணவனுக்கு இல்வாழ்க்கையில் ஒத்து நடவாத மனைவியும் எமன்களாகும்.

28. சந்தனக்கட்டை தேய்ந்தவிடத்தும் மணத்தில் குறையாது. அதுபோல அரசர் செல்வக் குறைவு நேர்ந்தபோதும் பிறர்க்கு உதவும் குணத்தில் குறையார்.

29. திருமகள் நம்மை வந்தடையும் போது சுற்றமும் செல்வமும், நல்ல உருவமும், உயர்வான குடிப்பிறப்பும் வந்தடையும். அவள் நீங்கிப் போய்விடின் அனைத்தும் நீங்கிவிடும்.ஆதலால் அவை நிலையற்றவை.

30. ஒருவன் தன்னை வெட்டும் போதும் அவனுக்கு நிழல் தந்து வெயிலை மறைக்கும் மரம். அதுபோல் அறிவுடையோர் தமக்குத் தீங்கு செய்பவர்க்கும் தம்மாலான உதவியைச் செய்வர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/38&oldid=1332727" இலிருந்து மீள்விக்கப்பட்டது